தந்திரத்தால் தப்பிக்கொண்டனர்!
தியானம்: 2026 ஆகஸ்டு 9 ஞாயிறு | வேத வாசிப்பு: யோசுவா 9:1-26

…. நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம் (யோசுவா 9:24).
இஸ்ரவேலர் ஒவ்வொரு ராஜாக்களாக முறியடித்து, அவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்றி, அங்குள்ளவர்களை அழித்து, வெற்றிகொண்டு அந்த இடங்களைக் கைப்பற்றி வருவதைக் கண்ட கிபியோனியர், தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்து தங்களை தப்புவித்துக்கொள்ள அவர்கள் பிரயாசப்பட்டனர். தங்களிடம் உள்ள பழைய பொருட்களையும், உடைகளையும், காலணிகளையும், தண்ணீர்குடுவை போன்ற அனைத்து பழைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு, யோசுவாவினிடத்தில் வந்து தாங்கள் தூர தேசத்திலிருந்து வருவதாகவும், இஸ்ரவேலர் மற்றைய ராஜாக்களோடே யுத்தம் பண்ணி, அவர்களை விரட்டியடித்த அனைத்துக் காரியங்களையும் கேள்விப் பட்டதாகவும், தங்களுக்கு எந்த ஆபத்தும் வராதபடிக்குத் தங்களோடே உடன்படிக்கை பண்ணும்படி கேட்டுக்கொண்டார்கள்.
யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் அவர்கள் சொன்னதை நம்பி அவர்களோடேகூட உடன்படிக்கை பண்ணினார்கள். தமக்கு இவர்களால் ஆபத்து வரும் என்பதை உணர்ந்து, தாங்களே தந்திரமாக யோசித்து, இஸ்ரவேலை நம்பவைத்து, தங்களை அழிவுக்குத் தப்புவித்துக்கொண்டனர் இந்தக் கிபியோனியர். மூன்று நாட்கள் சென்ற பின்னர், அவர்கள் தூரதேசத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல, தங்கள் அயலகத்தார் என்பது தெரிய வந்தபோதும், ஏற்கனவே அவர்களோடே உடன்படிக்கை பண்ணியபடியால் இஸ்ரவேலரால் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. “எங்களை வஞ்சித்தது என்ன?” என்று யோசுவா கேட்டான். அவர்களோ, “தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டது எங்களுக்கு அறிவிக்கப்பட்டபடியால், எங்கள் ஜீவன் நிமித்தம் பயந்து இதைச் செய்தோம்” என்றனர். இப்போதும் நீங்கள் சொல்வதைச் செய்வோம் என்றனர். அதனால் அவர்கள் கர்த்தருடைய சபைக்கும் அவர் பலிபீடத்திற்கும் விறகு வெட்டும், தண்ணீர் ஊற்றும் வேலையையே செய்து வருகிறார்கள்.
அன்று ஆகான், இஸ்ரவேலன், கர்த்தருடைய பிரமாணங்களை அறிந்தவன், தேவகட்டளையை மீறி, தீட்டானவற்றை இச்சித்ததால் அதற்குரிய தண்டனை அவனுக்கும் குடும்பத்துக்கும் கிடைத்தது. ஆனால் இங்கு கிபியோனியர், மெய்த்தேவனை அறியாதவர்கள், அவரது வல்லமையைக் கேள்விப்பட்டு, தமது பிராணனைக் காத்துக்கொள்ள தந்திரமாகச் செயற்பட்டார்கள், அதற்குத் தண்டனை கிடைத்தாலும், அவர்கள் அழிந்துபோய்விடவில்லை. இன்று நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று சொல்லுகிறோம், அவரது வார்த்தையை அறிந்திருக்கிறோம். தெரிந்துகொண்டே நாம் பாவம் செய்தால் எப்படித் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வோம்?
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, வார்த்தையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் நிர்விசாரத்தோடு இராதபடி எங்களைக் காத்தருளும். ஆமென்.