காக்கப்பட்டனர்

தியானம்: 2026 ஆகஸ்டு 10 திங்கள் | வேத வாசிப்பு: யோசுவா 10:1-15

YouTube video

யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும் (யோசுவா 10:6).

இஸ்ரவேலரிடத்தில் வந்து அடைக்கலம் புகுந்த கிபியோனியருக்கு இப்போது ஒரு பிரச்சனை வந்தது. அவர்கள் யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி, தங்களைக் கைவிடாமல் சீக்கிரமாய் வந்து தங்களை ஆபத்தினின்று இரட்சிக்கும்படிக்குக் கேட்டுக்கொண்டனர். கிபியோனியர் யோசுவாவோடே சமாதானம் பண்ணிக்கொண்டார்கள் என்பதை எமோரியரின் ஐந்து ராஜாக்களும், அறிந்து அவர்களோடே யுத்தம் பண்ணும்படிக்கு வந்து பாளயம் இறங்கினார்கள். யோசுவாவுக்குக் கிபியோனியர் செய்தி அனுப்பியபோது, யோசுவாவும் அவனது படைவீரரும் உடனே புறப்பட்டுப் போகிறார்கள்.

அப்பொழுது தேவன் யோசுவாவை நோக்கி: “அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவனும் உனக்கு எதிர்த்து நிற்பதில்லை” என்ற உறுதியைக் கொடுத்தார். அங்கே கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் பண்ணினார். அவர்களை இஸ்ரவேலருக்கு முன்பாக கலங்கடித்தார். அவர்கள் சிதறி ஓடுகையில் வானத்தில் இருந்து கற்களை அவர்கள்மேல் விழப்பண்ணினார். இஸ்ரவேலர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும், கல்மழையால் செத்தவர்களே அதிகமாக இருந்தார்கள். கர்த்தர் தமது ஜனங்களுக்காக யுத்தம் பண்ணினார்.

அதே தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவரது வல்லமை சற்றேனும் குறைந்துபோவதில்லை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் அவரது வார்த்தை என்றைக்கும் ஒழியாது. இன்று நம்மில் யாராவது பிறரால் எதிர்க்கப்பட்டு, அநீதியாக குற்றம் சாட்டப்பட்டு, செய்வதறியாது கலங்கி நிற்கிறோமா? தேவன் நமக்காக யுத்தம் செய்ய வல்லவராய் இருக்கிறார். மனுஷர் நம்மைக் கைவிடலாம், ஆனால் கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

இக்கட்டான நேரத்தில் கிபியோனியர் தங்கள் பெலனை நம்பாது, இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனத்தை எப்போதும் வெற்றி சிறக்கச் செய்கிறார் என்று கண்டு, யோசுவாவிடத்தில் சமாதானம் பண்ணிக்கொண்டனர். அதனால் அவர்களை எதிர்த்தவர்கள் முன்னிலையில் காக்கப்பட்டனர். அதுபோலவே நாமும் மனுஷரின் பெலனை நம்பாமல், முழுமையாக தேவனில் சார்ந்து நிற்கும்போது, தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார். “தேவன் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்களோ சும்மா இருப்பீர்கள்” என்றே இஸ்ரவேலுக்கு அன்று சொல்லப்பட்டது. அந்த தேவன் இன்று தம்மை அண்டிய நமக்காகவும் யுத்தம் செய்வார். அவரை நம்புவோமா! “எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்” (சங்.57:2). நாமும் கூப்பிடுவோமாக.

ஜெபம்: சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, சேனாபதியாய் நீர் எங்களுக்கு முன்னே சென்று எங்களுடைய யுத்தங்களை நடத்துகிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.