மெய்யான வழிகாட்டி

தியானம்: 2026 ஆகஸ்டு 13 வியாழன் | வேத வாசிப்பு: யோசுவா 23:1-16

YouTube video

இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள் (யோசுவா 23:8).

மிகுந்த தாழ்மையுடன் கர்த்தருக்குப் பணிசெய்ய ஆரம்பிக்கிற ஊழியர்கள் பலர், இறுதியில் கர்த்தருக்குச் சமமாக தங்களை உயர்த்திவிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கிறோம். அவர்களுடைய பெயர் பிரசித்தம் செய்யப்படும்போதும், புகழ்ச்சியும் கனமும் தேடிவரும்போதும், தங்களைக் கர்த்தருக்குச் சமமாகவும், சிலசமயம் மேலாகவும் எண்ணி, தங்களையே அனைவரும் கனம்பண்ண வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இங்கே யோசுவாவோ, வயது முதிர்ந்து தனது வாழ்வு முடியப்போகிறது என்பதை உணர்ந்தபோதும், ஜனங்களைக் கூப்பிட்டு அவர்கள் தேவனுக்குரிய கனத்தைக் கொடுக்கவேண்டும் என்பதையும், அவருடைய வழிநடத்துதலை என்றைக்கும் மறந்துவிடக்கூடாது என்பதையும் அவர்களுக்கு உறுதியாக ஞாபகப்படுத்துவதைக் காண்கிறோம். “நான் சீக்கிரத்தில் மரித்துவிடுவேன்; ஆனால் தேவன் செய்த காரியங்களும், அவரது வார்த்தைகளும் ஒருநாளும் அழியாது. அதைக் கடைப்பிடித்து நடவுங்கள், மாறாக, கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணி அந்நிய தேவர்களைச் சேவிக்கவேண்டாம்” என்றும் யோசுவா எச்சரிக்கிறார். வார்த்தைக்கு மாறாகச் செயற்பட்டால், தேவனுடைய தண்டனைக்கு ஆளாவீர்கள் என்பதையும் அவர்களுக்கு எச்சரிப்பாகச் சொல்லுகிறார்.

இன்று இப்படியாக தேவனையும், அவரது வார்த்தைகளையும் நோக்கி மக்களை வழிநடத்துகிற வழிகாட்டிகளையும், ஊழியர்களையும் நாம் காணுவது அரிதாகவே உள்ளது. எல்லாரும் எனது சபை, எனது விசுவாசிகள் என்று தாங்களே எல்லாரையும் கட்டுப்படுத்திக்கொண்டு, பிரபல்யம் அடையப் பார்க்கிறார்களே தவிர, தேவனுக்கு மகிமை தேடுவது அரிதாகிவிட்டது. “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், கர்த்தரோ விளையச் செய்தார்” என்கிறார் பவுல். ஊழியம் என்பது இப்படியாக இருக்கவேண்டும். உண்மையான ஒரு ஊழியனுக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு இதுவாகவே இருக்கவேண்டும். நமது கரங்களில் தேவன் கொடுத்த பொறுப்பைச் சரிவரச் செய்துவிட்டு, மற்றகாரியங்களைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிட வேண்டும். ஊழியம் நம்முடையது அல்ல; அது தேவனுடையது. அவரது நாமத்தை மகிமைப்படுத்தவேண்டியதே நமது ஊழியம்.

ஏரோது பேசியதைக் கேட்ட ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவ சத்தம் என்று சொன்னார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினாலே, அந்த நேரத்திலேயே ஒரு தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். ஆனால், யோசுவா ஒரு நல்ல ஊழியனாக, வழிகாட்டியாக இருந்தது மாத்திரமல்ல, தனது காலத்தின் பின்பும் ஜனங்கள், கர்த்தருக்குப் பிரியமாய் நடந்துகொள்ள வேண்டுமென்பதில் அக்கறையுள்ளவராக இருந்தார்.

ஜெபம்: பரமபிதாவே, எங்களைக் காண்கிறவர்கள் உமது சாயலை காணத்தக்கதாக உமது முகத்தின் வெளிச்சத்திலே நாங்கள் நடக்க அருள் தாரும். ஆமென்.