வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
தியானம்: 2026 ஆகஸ்டு 14 வெள்ளி | வேத வாசிப்பு: யோசுவா 24:1-14

ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் … சேவியுங்கள் (யோசு.24:14).
விக்கிரகங்களைச் செய்து பிழைத்த ஒரு தகப்பனின் மகனாகிய ஆபிராமை தேவன் அழைத்து, அவர் சந்ததியை கடற்கரை மணலத்தனையாயும், வானத்தின் நட்சத்திரங்களைப்போலும் ஆசீர்வதிப்பதாக வாக்குரைத்தார். அடிமைத்தனத்தில் இருக்க நேரிட்டாலும், அந்த சந்ததியை விடுவித்து வாக்குப்பண்ணிய தேசத்துக்குக் கொண்டுவருவதாகவும் கர்த்தர் வாக்களித்தார். அதுபோலவே கர்த்தர் செய்தும் முடித்தார். வனாந்தரத்திலே நாற்பது வருடங்கள் அவர்கள் அலைந்து திரிந்தாலும், பலவித எதிர்ப்புக்களைச் சந்தித்தாலும், பலவித யுத்தங்களுக்கு உட்பட்டாலும், இறுதியில் வாக்கு பண்ணிய தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக்கொண்டார்கள். யோசுவா, காலேப்போடுகூட எகிப்திலிருந்து புறப்பட்டவர்களின் இரண்டாம் சந்ததி வாக்கு பண்ணிய கானானுக்குள் பிரவேசித்தார்கள்.
இஸ்ரவேலர்; பண்படுத்தாத தேசத்தையும், கட்டாத பட்டணத்தையும் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார் என்றும், அவர்கள் நடாத திராட்சத் தோட்டத்தின் பலன்களையும், ஒலிவமரத்தின் பலன்களையும் அவர்கள் புசிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு நினைவுபடுத்திய யோசுவா, “ஆகவே தேவனுக்கு உண்மையாய் இருங்கள். அந்நிய தேவர்களைச் சேவிக்க நாடாதீர்கள். தேவனை மாத்திரமே முழு உள்ளத்தோடு தேடுங்கள்” என்றும் நல்லாலோசனையை மக்களுக்கு வழங்கினார். ஆம், தேவன் வாக்கு ரைத்தவர், அவர் உண்மையுள்ளவர். பொய் சொல்ல அவர் மனுஷனுமல்ல, மனம்மாற மனுபுத்திரனுமல்ல, அவர் சொன்னதைச் செய்யாமல் இருப்பாரோ! ஆகவே, இந்த வாக்குமாறாத தேவனை நாம் நமது நம்பிக்கையாகக் கொண்டிருந்தால், அவருக்குள் நிலைத்திருக்க ஜாக்கிரதையாயிருப்போமாக. இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணியவர், இன்று நமக்காகவும் யுத்தம் பண்ண வல்லவராய் இருக்கிறார். அவருடைய வாக்குகள் யாவும் இன்று கிறிஸ்துவுக்குள் நமக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது.
நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆகையால் நாம் தைரியத்தோடே கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். வாக்குரைத்த இந்தத் தேவனை நாம் இன்று பற்றியிருக்கிறோமா? இருந்தால் என்னதான் நேரிட்டாலும் நாம் சோர்ந்து போகத் தேவையில்லை. கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்போம். அவருக்குள் தைரியமாய் இருப்போம். அவர் வாக்குமாறாதவராய் நம்மைத் தம்மண்டை நிச்சயம் சேர்த்துக்கொள்வார்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒழிந்துபோகாத வல்லமையுள்ளதும் எங்களுக்கு வாழ்வைத் தருகிறதுமான தேவவார்த்தைகளுக்காக உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.