கர்த்தரையே சேவிப்போம்!
தியானம்: 2026 ஆகஸ்டு 15 சனி | வேத வாசிப்பு: யோசுவா 24:15-33

ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள் (யோசுவா 24:18).
இங்கே யோசுவா ஜனங்களைப் பார்த்து ஒரு சவாலிடுகிறார். “கர்த்தரைச் சேவிப்பது உங்களுக்கு ஆகாததாய்க் கண்டால் பின்னே யாரைச் சேவிப்பீர்கள்? நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தெய்வங்களைச் சேவிப்பீர்களோ? அல்லது உங்களோடு வாசம் பண்ணும் எமோரியரின் தெய்வங்களைச் சேவிப்பீர்களோ?” என்று கேட்ட யோசுவா, “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று ஒரு உறுதியான அறிக்கையை விடுவதைக் காண்கிறோம். இவ்விதமான ஒரு உறுதியான அறிக்கையை, நமது ஆவிக்குரிய வாழ்வைக் குறித்தோ அல்லது, நாம் ஆராதிக்கும் தேவனைக் குறித்தோ நம்மால் சொல்லமுடியுமா? அன்று சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், “நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். அவர் தப்புவிக்காமற் போனாலும் நாம் இந்த பொற்சிலையை வணங்குவதில்லை” என்று ஆணித்தரமாகக் கூறினார்களே. இந்த வைராக்கியம் நம்மிடம் உண்டா?
“எனக்கு அடைக்கலமாய் இருக்கிற தேவனை உனக்குத் தாபரமாய்க் கொண்டாய்” என்றார் சங்கீதக்காரர். பவுலோ, “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1கொரி.11:1) என்று தைரியமாய் அழைப்பு விடுத்தார். தேவனை உண்மையாய் முழு மனதோடு பின்பற்றினவர்கள், இப்படியான அறிக்கையைத் தைரியமாகச் செய்தார்கள். நம்மால் இன்று இப்படிப்பட்ட சவாலைப் பிறருக்குக் கொடுக்க முடியுமா? தேவனோடுள்ள உறவில் நாம் உண்மைத்துவமாய் இருக்கிறோமா என்பதை அடிக்கடி நம்மை நாமே சோதித்துப் பார்ப்பது அவசியம். போலியான வாழ்வு சீக்கிரம் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும். போலித்தனங்களையும், மாய்மால வாழ்வையும் தேவன் வெறுக்கிறார். எனவே உண்மையாய் மனந்திரும்புவோம். நமக்கும் தேவனுக்குமான உறவைக் காத்துக்கொள்வோம்.
அன்று ஏலியின் குடும்பத்திலிருந்த போலித்தனங்களைத் தேவன் சுட்டிக் காட்டினார். ஏலியின் குமாரர் ஒப்னியும், பினேகாசும் ஒரே நாளில் மரித்துப் போகும்படிக்கு அவர்களுடைய அக்கிரமம் தேவனுடைய சந்நிதிக்கு எட்டியது. ஏலியின் சந்ததியைத் தேவன் எச்சரித்தார் என்று வாசிக்கிறோம். எனவே போலித் தனங்களை அகற்றுவோம். தேவனுக்கு முன்பாக உண்மையாய் வாழுவோம். பாவங்களை அறிக்கை செய்யும்போது அவர் நம்மை மன்னித்து, புதிய வாழ்வைத் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார் நாம் அவரின் பிள்ளைகளாக பிறருக்குச் சவாலிடத்தக்க பிள்ளைகளாய் நம்மை நிச்சயம் மாற்றுவார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப்பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொண்டு, … அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக (உபா.13:4)
ஜெபம்: கர்த்தாவே, மாயை, பொய்வசனிப்பு, போலித்தனங்களை நாங்கள் விலக்கி உத்தம இருதயத்தோடே உம்மைச் சேவிக்க உமதருள் தாரும். ஆமென்.