வெற்றி தேவனுடையது!
தியானம்: 2026 ஆகஸ்டு 16 ஞாயிறு | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 1:1-18

யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார் (நியாயாதி. 1: 4).
யோசுவா மரித்த பின்னர், இப்போது கானானியரை முறியடிக்க தங்களில் யார் புறப்பட்டுப் போகவேண்டும் என்று இஸ்ரவேலர் கேட்டபோது, தேவன் யூதாவைத் தெரிந்துகொள்ளுகிறார். அப்பொழுது யூதா தன் சகோதரரையும் கூட்டிக்கொண்டு யுத்தத்திற்காகப் புறப்படுகிறான். ஆனால் அங்கே யுத்தம் பண்ணியது யூதா மாத்திரமல்ல, தேவன் அவர்களோடே இருந்து யுத்தம் பண்ணினார். கானானியரையும், பெரிசியரையும் கர்த்தரே அவர்களுடைய கைகளில் ஒப்படைத்தார். அதனால் அவர்கள் வெற்றி கொண்டார்கள். எனவே வெற்றி தேவனுடையதே!
அதோனிபேசேக் என்பவனைப் பிடித்து அவனுடைய கால், கை பெருவிரல்களை வெட்டினார்கள். அப்பொழுது அதோனிபேசேக் என்ன சொல்லுகிறான்: “நான் எழுபது ராஜாக்களின் கை, கால் பெருவிரல்களை வெட்டினவன். அவர்கள் எனது மேஜையின் கீழ் உணவைப் பொறுக்கித் தின்றார்கள். இப்பொழுது நான் அவர்களுக்குச் செய்தது போலவே, தேவன் எனக்குச் செய்தார்” என்று அறிக்கையிடுவதைக் காண்கிறோம். அந்நிய ராஜாவாகிய அதோனிபேசேக், தேவனே யுத்தம் பண்ணுகிறார் என்பதை தனது வாயாலேயே அறிக்கையிடுகிறான். எழுபது பேரை வெட்டிப்போட்ட அவனுக்கு முன்னால் யூதா எம்மாத்திரம். ஆனால் யூதாவோடு இருந்த தேவனோ வல்லமையும், பராக்கிரமும் நிறைந்த தேவனல்லவோ! அவருக்கு முன்னால் எதிர்த்து நிற்க ஒருவனாலும் கூடாது.
நம்மால் போராடி ஜெயிக்கமுடியாத போராட்டங்களை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருக்கும்போது, அவரே நமக்கு வெற்றியைத் தர வல்லவராய் இருக்கிறார். நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன். பூமியிலே உயர்ந்திருப்பேன் (சங்.46:10) என்று வாசிக்கிறோம். நாம் நம்பிக்கையோடே காத்திருப்போம். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (சங்.57:2). என்கிறார் சங்கீதக்காரர். இன்று நாமும் அப்படியே தேவனை நோக்கிக் கூப்பிடுவோமா! நமது போராட்டம் சக மனுஷரோடு அல்ல; அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களின் பொல்லாத ஆவிகளோடுமே ஆகும். எனவே நாம் தேவனின் பெலத்தோடு அவற்றை எதிர்கொண்டு, வாழ்விலே முன்னேறிச்செல்ல வேண்டும். சக மனுஷரோடு சண்டை போட்டுக்கொண்டு இருக்க நாம் அழைக்கப்படவில்லை. கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோம.12:18) என்ற பவுலுடைய வார்த்தையை நினைவில் கொள்வோம். ஆண்டவரோடு சேர்ந்து நிற்போம். தேவன் நமக்காக வெற்றிசிறப்பார்!
ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் சந்திக்கும் போராட்டங்கள், சோதனைகளில் எங்களுக்குக் கொடுத்துவரும் திடநம்பிக்கைக்காகவும் பெலனுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.