கர்த்தருடைய கை

தியானம்: 2026 ஆகஸ்டு 17 திங்கள் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 2:1-15

YouTube video

கர்த்தர் சொல்லியபடியும் …. அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை … அவர்களுக்கு விரோதமாயிருந்தது (நியாயாதி.2:15).

இஸ்ரவேலர் கானானுக்குள் வந்தபோது, கர்த்தர் கட்டளையிட்டிருந்தபடி அத்தேசத்து குடிகள் யாவரையும் அவர்கள் துரத்திவிடவில்லை. சிலர் அங்கு இன்னமும் குடியிருந்தார்கள். இப்பொழுது தேவன்: “நான் உங்கள் முற்பிதாக்களோடு உடன்படிக்கை பண்ணிய பிரகாரம் உங்களை வாக்குப்பண்ணிய தேசத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் இந்தக் கானானியருடன் எந்த உடன்படிக்கையும் பண்ணவில்லை; அப்படியிருக்க அவர்களைத் துரத்தாமல் வைத்திருக்கிறபடியால், அவர்கள் எப்பொழுதும் உங்களுக்குக் கண்ணியாய் இருப்பார்கள். அவர்கள் உங்களை எப்போதும் நெருக்கிக்கொண்டு இருப்பார்கள்” என்பதாகக் கூறினார். இதைக் கேட்டபோது ஜனங்கள் அழுதார்கள்.

யோசுவா உயிரோடே இருக்குமட்டும் ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். யோசுவா மரித்து அடக்கம் செய்யப்பட்டான். அந்த ஜனங்களும் எல்லாரும் மரித்துப்போய், புதியதொரு சந்ததி வந்தது. அவர்கள் அங்கிருந்த ஜனங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, பாகால்களை வணங்கி, அஸ்தரோத்துக்களைப் பணிந்துகொண்டார்கள். ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டு தேவனைவிட்டுச் சோரம் போனார்கள். அப்பொழுது கர்த்தர் கடுங்கோபம் கொண்டு, கொள்ளையர்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். அவர்கள் புறப்பட்டுப் போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை அவர்களுக்குத் தீமைக்கேதுவாகவே இருந்தது. இதனால் ஜனங்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள். தேவன் நியாயாதிபதிகளை எழுப்பி அவர்களைக் கொள்ளையர் கையில் இருந்து விடுவித்தார். ஆனால் அவர்களோ மீண்டும் மீண்டும் தேவனுடைய கட்டளைகளை விட்டு வழிவிலகி, அந்நிய தேவர் களையே சேவித்தார்கள். இதனால் கர்த்தர், மற்ற ஜாதிகளைத் துரத்தாமல், இஸ்ரவேலுக்கு இடறலாக அவர்களை வைத்திருந்தார் என வாசிக்கிறோம்.

இதுபோலவே நமது வாழ்விலும், தேவன் வெறுக்கிற காரியங்களை நாம் வைத்திருந்தால், அல்லது பாவத்தில் வாழ்ந்துகொண்டிருந்தால் அது நம்மைத் தேவனைவிட்டு முற்றிலுமாக வழிவிலகிப்போகச் செய்துவிடும். பாவத்தில் சிறியது, பெரியது என்று இல்லை. வார்த்தைக்குப் புறம்பானது அனைத்தும் பாவமே. நாம் ஜாக்கிரதையாய் இருப்போம். நம்மைத் தேவனை விட்டுப் பிரித்துப் போடுகின்ற, தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பான எந்தக் காரியத்தையும் நாம் நமது வாழ்வில் அனுமதிக்கவே கூடாது. அதுவே நம்மை வீழ்த்தப் பிசாசானவன் போடும் தந்திரம். தேவனோடுள்ள உறவை விட்டு நம்மைப் பிரித்துவிட்டால் பிறகு நம்மை இலகுவாக பாவத்தில் வீழ்த்திவிடலாம் என்பதுவே அவனுடைய ஆதிமுதலான திட்டம். அதற்கு இடமளிக்கலாமா?

ஜெபம்: கர்த்தாவே, உம்மோடுள்ள உறவிலிருந்து பிரித்துப்போடுகிற எல்லாப் பாவமான காரியங்களிலிருந்தும் எங்களுக்கு பூரண விடுதலையைத் தந்தருளும். ஆமென்.