பராக்கிரமசாலியே!

தியானம்: 2026 ஆகஸ்டு 20 வியாழன் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 6:11-40

YouTube video

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் (நியாய.6:12).

மீதியானியரின் கையில் அகப்பட்டிருந்த இஸ்ரவேலர் மிகவும் பயந்ததினால் குகைகளில் ஒளித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் வழக்கமாக கோதுமையை வெளியான இடத்தில்தான் போரடிப்பார்கள். ஆனால் இப்போது மீதியானியருக்குப் பயந்ததினாலே, கிதியோன் திராட்சரசம் பிழிகிற ஆலைக்குள்ளே இருந்து போரடித்துக் கொண்டு இருக்கிறான். பயந்த நிலையில் இருந்த அவனை, கர்த்தருடைய தூதனானவர் “பராக்கிரமசாலியே” என்று அழைத்து, “கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” என்கிறார். பொதுவாக பயந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்து நாம் பயந்தாங்கொள்ளி என்றுதான் கூறுவோம். ஆனால் கர்த்தருடைய தூதனானவரோ இங்கே, “பராக்கிரமசாலியே” என்று அழைத்ததுமல்லாமல், “தேவன் உன்னுடனே இருக்கிறார்” என்கிறார். தேவன் என்னுடனே இருக்கிறார் என்ற நம்பிக்கையில் ஒருவன் வாழுவானேயாகில் அவனுக்குள் பயம் என்பது இருக்கக்கூடாது. ஆம், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியையுமே கொடுத்திருக்கிறார் என்பது வேத வார்த்தை.

இஸ்ரவேலரை மீதியானியரின் கையிலிருந்து மீட்பதற்காக தேவன் கிதியோனையே அழைக்கிறார். அதை அவனாலேயே நம்பமுடியவில்லை. எனவே அவன், “தேவனுக்கு என்மேல் கோபம் வராதிருப்பதாக” என்று சொல்லி, ஒரு அடையாளத்தைக் கேட்டு, தன்னோடு பேசினது உண்மையிலேயே தேவன்தானா என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டான். அநேகரை யுத்தத்திற்காக சேர்த்துக்கொண்டபோதும், தேவன் அதைத் தடுத்து முன்னூறு பேருடன் மட்டுமே போகும்படிக்குக் கூறுகிறார். அவர்கள் போய் அநேகராய் இருந்த மீதியானியரை வெற்றிகொண்டு, வெற்றியோடு திரும்பினார்கள். பானைகளை உடைத்து, எக்காளத்தை ஊதியபோது, கர்த்தர் மீதியானியரை ஒருவருக்கெதிராக ஒருவரை எழுப்பிவிட்டார். அவர்களே ஒருவரையொருவர் தாக்கி இறந்துபோனார்கள். கிதியோனும் அவன் சேனையும் வெற்றிகொண்டது. இஸ்ரவேலருக்கான வெற்றியைத் தேவனே அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்.

இன்று நாம் எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கண்டு பயந்து ஒளித்துக்கொண்டு இருக்கிறோமா? நமக்குள் பலமாக இருக்கிற கர்த்தரை மறந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்த்தரை நம்பி அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவரே நமக்கு ஜெயத்தைத் தரவல்லவராய் இருக்கிறார். எனவே நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டவராய் இருக்கிற தேவனையே நோக்கிப் பார்ப்போம். எல்லாம் அவருக்கு லேசான காரியமே.

ஜெபம்: தகப்பனே, நாங்கள் பெலவீனர். ஆனால் கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் எங்களோடுகூட இருந்து எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.