தவறான தலைமைத்துவம்

தியானம்: 2026 ஆகஸ்டு 22 சனி | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 8:22-35

YouTube video

அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன் …. கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான் (நியாயா. 8:23).

இஸ்ரவேலரை மீதியானியரின் கைகளிலிருந்து கிதியோன் மீட்டுக்கொண்டு வந்ததினால், ஜனங்கள் கிதியோனையும் அவனது குமாரனையும் தங்களைத் தொடர்ந்து ஆளும்படிக்குக் கேட்கிறார்கள். அப்பொழுது கிதியோன் அவர்களுக்குச் சரியானதொரு பதிலையே கொடுக்கிறான். “நாங்கள் உங்களை ஆளமாட்டோம்; கர்த்தரே உங்களை ஆளுவாராக” என்கிறான். இதிலே சரியானதொரு தலைவனாக செயற்பட்ட கிதியோன், பின்னர் தவறான ஒரு தலைவனாகச் செயற்பட்டு, இஸ்ரவேலருக்குள் அழிவைக்கொண்டு வந்தான் என்பது துக்கத்துக்குரிய விஷயமாகும்.

மீதியானியரிடம் கொள்ளையாடிய பொன் ஆபரணங்களைக் கொண்டுவரும்படிக்கு இஸ்ரவேலரிடம் கேட்டபோது, அவர்களும் சந்தோஷமாகக் கொடுப்பதாகக் கூறி அனைத்தையும் கொடுக்கின்றனர். அப்பொழுது கிதியோன் அவற்றைக்கொண்டு ஒரு ஏபோத்தை உண்டுபண்ணி அதைத் தன் ஊராகிய ஒப்ராவிலே வைத்தான். ஜனங்கள் அனைவரும் ஏபோத்தை வழிபட்டு கர்த்தரை விட்டுச் சோரம்போனார்கள். இது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாய் இருந்தது. நல்லதொரு தலைவனாகக் கர்த்தர் கிதியோனைத் தெரிந்தெடுத்து, அவனைக் கொண்டு மீதியானியரின் கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவித்தார். ஆனால் இப்போது அதே கிதியோன் தவறான வழி நடந்து, மக்களையும் தேவனை விட்டு வழிவிலகச் செய்வதைக் காண்கிறோம்.

இதேபோலவே இன்றும் கிறிஸ்துவின் ஊழியக்காரராக இருப்போர், சிறிது காலங்களில் பெருமைகளும், ஊழியப் பணிகளும் அதிகரிக்கும்போது, தேவனையும், அவரோடு உள்ள உறவையும் மறந்து தங்கள் ஊழியங்களிலேயே முழு மூச்சாக இறங்கி, சிலகாலங்களில் பலவிதமான பாவங்களில் சிக்குண்டு விழுந்து போவதைக் காண்கிறோம். தேவனோடுள்ள உறவே நம்மை எல்லா வேளைகளிலும் பாவம் செய்யாதபடிக்குக் காத்துக்கொள்ளும். ஊழியங்களிலும், சுவிசேஷப் பணிகளிலும் தலைமைத்துவத்தில் இருக்கின்ற நாம் மற்றவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக நடந்து கொள்ளுகிறோமா? அல்லது அவர்களுக்கு தவறானதொரு தலைமைத்துவத்தைக் கொடுத்து, அவர்கள் தேவனை விட்டுவிலக நாமே காரணராகிறோமா? நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஆண்டவர் நம்மைத் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும் மாதிரிகளாக இருக்கும்படிக்கே அழைத்திருக்கிறார். நாம் நல்ல மாதிரிகளாக இருந்து நம்மைப் பின்பற்றுவோருக்கு முன்மாதிரிகளாய் விளங்குவோமாக. எந்த நிலையிலும் கர்த்தரையே அண்டி, தாழ்மையைத் தரித்துக்கொள்வோமாக.

ஜெபம்: எங்கள் நேசகர்த்தாவே, உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகப் பண்ணுகிற எல்லாச் சத்துருவின் சூழ்ச்சிகளுக்கும், தந்திரங்களுக்கும் எங்களை விலக்கிக் காத்தருளும். ஆமென்.