நிந்தனை மாறியது
தியானம்: 2026 ஆகஸ்டு 23 ஞாயிறு | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 11:1-28

…. நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? (நியாயா. 11:7).
யெப்தா என்பவன் மிகவும் பராக்கிரமசாலியாக இருந்தபோதிலும் அவன் பரஸ்திரீயின் மகன் என்பதால் அவனுடைய மற்றைய சகோதரர்கள் பெரியவர்களானபோது, யெப்தாவை, “உனக்கு எங்கள் தகப்பன் வீட்டில் இடமில்லை, நீ அந்நிய ஸ்திரீக்குப் பிறந்தவன்” என்று சொல்லி அவனைத் துரத்திவிட்டார்கள். அவனும் அங்கிருந்து ஓடி வேறு இடத்திற்குப்போய் குடியிருந்தான். சில நாட்களின் பின்னர், அம்மோன் புத்திரர் இஸ்ரவேலருக்கு எதிராக வந்தபோது, கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை தேடி வந்து, அம்மோன் புத்திரருக்கு எதிராக சண்டை போடுவதற்கு எங்களுக்கு சேனாதிபதியாக இருக்கவேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். யெப்தாவோ, “நீங்கள் அல்லவா என்னைத் தள்ளி வைத்தீர்கள், இப்பொழுது உங்களுக்கு ஆபத்து வந்ததும் என்னைத் தேடி வருகிறீர்களோ” என்று சொன்னான். அம்மோன் புத்திரரின் கையில் இருந்து உங்களை விடுவிக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு உதவினால் என்னைத் தலைவனாக வைத்துக்கொள்வீர்களா என்று அவர்களோடே பேரம் பேசினான். அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்.
நிந்திக்கப்பட்டு தள்ளப்பட்ட அதே இடத்தில் இப்போது தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை அறிந்த யெப்தா, தான் பராக்கிரமசாலிதானே தன் பெலத்தால் அவர்களை வென்றுவிடலாம் என்று எண்ணிப் புறப்பட்டுப் போகவில்லை. அவன் எல்லாக் காரியத்தையும் முதலிலே மிஸ்பாவிலே தேவனிடத்தில் சொன்னான் என்று காண்கிறோம். அவன் தன் பெலத்தையல்ல, தேவனே அம்மோனியரின் கையில் தனக்கு வெற்றியைக் கொடுக்க வல்லவர் என்பதை நம்பினான். இன்று நம்மில் யாராவது நிந்திக்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இருக்கிறோமோ? நமது வேதனையை முதலில் தேவனிடத்தில் அறிக்கையிடுவோமாக. அவரே நமக்கு வெற்றியைத் தர வல்லவர். அவரே நமது நிந்தையை நீக்க வல்லவர். நமது சொந்தப் பெலத்தையோ, சுயபுத்தியையோ சாராதிருப்போமாக. கர்த்தரையே முற்றிலுமாய் நம்பி அவரிடம் நமது நிலைமையைச் சொல்லும்போது, அவர் நியாயம் கிடைக்கச் செய்வார். அவரே நமக்காக யுத்தம் செய்கிறவர்.
“மனுஷரை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்கிறது கர்த்தருடைய வார்த்தை. அப்படியே மனுஷர் உதவி செய்ய முடியாத இடத்திலும் கர்த்தர் உதவிட வல்லவராய் இருக்கிறார். அதை நாம் விசுவாசித்து நம்பிக்கையோடு காரியத்தைக் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து விடுவோம். அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். நம்மை ஒதுக்கி னவர்களே நம்மைத் தேடி வரும்படி கர்த்தர் செய்வார். அவரை நம்புவோமாக!
ஜெபம்: “அன்பின் தேவனே, எங்கள் சிறுமையையும், இயலாமையைப் பார்த்து மனிதர்கள் புறந்தள்ளலாம். புழுதியிலிருந்தும் குப்பையிலிருந்தும் நீர் எங்களைத் தூக்கியெடுத்தீரே. உம்மையே நாங்கள் உயர்த்துகிறோம் ஆண்டவரே. ஆமென்.”