சம்பூரணமாய் கொடுப்பார்
தியானம்: 2026 ஆகஸ்டு 26 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 1:1-8

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் …. தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக். 1:5).
நாம் வாழுகிற இந்தப் பொல்லாத உலகத்திலே அனைத்தையும் நிதானித்து அறிந்துகொள்வதற்கு நமக்கு ஞானம் அவசியம். ஏனெனில், இன்று பாவம் எது என்று தெரியாத அளவுக்குப் பிசாசானவன் மனிதனுடைய மனதைக் குருடாக்கிவிட்டான். கண்ணை மூடிக்கொண்டு நடப்பதுபோல நாம் இன்று நடந்துகொண்டிருக்கிறோம். எப்போது, எங்கே பள்ளத்திலே விழுவோம் என்றே தெரியாது. இதற்கு ஜாக்கிரதை அவசியம் என்றாலும், ஞானம் மிக மிக அவசியம். தேவன் ஞானத்தைக் கேட்கிறவர்களுக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிறவர் என்று யாக்கோபு 1:5ஆம் வசனத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நாம் கொஞ்சமேனும் சந்தேகங் கொள்ளாமல் முழு விசுவாசத்தோடு கேட்கவேண்டும் என்கிறார் யாக்கோபு. சந்தேகப்படுகிறவன் காற்றினால் அலசடிப்படுகிற அலைகளுக்கு ஒப்பாயிருப்பான் என்றும் எழுதுகிறார். நாம் சரியான தீர்மானங்களை எடுக்கவும், எது சரி, எது பிழையென்பதை நிதானிக்கவும் நமக்கு ஞானம் அவசியம்.
அறிவு நல்லது; அதைப் பலவழிகளில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிவினால் பெற்றுக்கொண்டதைச் சரியாகச் செயற்படுத்த நமக்கு ஞானம் அவசியம். ஆகவே நாம் எப்போதும் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணம், பொருள், வசதி, வாய்ப்புக்களை நாம் அடிக்கடி கர்த்தரிடம் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது “ஆண்டவரே எனக்கு ஞானத்தைத் தாரும்; நான் சரியான பாதையிலே செல்ல, தீர்மானங்களைச் சரிவர எடுக்க ஞானத்தைத் தாரும்” என்று கேட்டிருக்கிறோமா? தேவன் பணத்தைக் கேட்டால் அதைச் சம்பூரணமாய்க் கொடுக்கமாட்டார்; ஏனெனில் அதனால் நாம் பாவத்தில் சுலபமாய் விழுந்துவிடுவோம் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஞானம் அப்படியல்ல, தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவருமே ஞானமாய் நடக்கவேண்டும், விழுந்துபோகக் கூடாது என்று நம்மில் கரிசனைகொண்ட கர்த்தர் அவர். எனவே நாம் சந்தேகப்படாமல் கேட்டால் அவர் ஞானத்தைச் சம்பூரணமாய்க் கொடுப்பார்.
“தேவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று நீதிமொழிகள் கூறுகிறது. நாம் தேவனுக்கு உண்மையாய் பயந்து அவரைக் கனப்படுத்துவோமானால் நிச்சயம் நமக்குள் ஞானம் ஊற்றெடுக்கும். ஆகவே, கர்த்தர் நமக்குச் சம்பூரணமாய் கொடுக்க ஆயத்தமுள்ளவராயிருக்கும்போது, ஞானத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு, தேவனுடைய பார்வையிலும், மனுஷருடைய பார்வையிலும் ஞானவான்களாய் நடந்துகொள்வோம். பொல்லாத இந்த உலகத்திலே வஞ்சகத்துக்கு நாம் தப்பி வாழ தேவன் தரும் ஞானம் அவசியம்.
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, ஒரு காரியத்தை செவ்வையாய் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்ற வேதவசனத்திற்கேற்ப எங்களுக்கு வேண்டிய ஞானத்தை கிருபையாய்த் தந்தருளும். ஆமென்.