பாவத்தின் தன்மை

தியானம்: 2026 ஆகஸ்டு 28 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 13:16-30

YouTube video

… அவரை காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு …. (யோவான் 13:2)

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்துப் புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் (ஆதி.3:6). பாவம், பார்ப்பதற்கு இன்பமாகவேத் தோன்றும். அதில் ஈடுபடும்போதும் சந்தோஷமாகவே இருக்கும். முடிவிலோ கட்டுவிரியன்போலக் கடிக்கும். நம்மைப் பாதாளத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். பாவம் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ளும். பாவத்திற்கு இடம் கொடுத்தால் அது நம்மைத் தனக்கு அடிமையாக்கிவிடும்.

யூதாசின் நடவடிக்கைகளைச் சற்றே கண்ணோக்குவோம். அவன் எப்போதும் பணப்பையுடன் திரிவதால் ஒருவேளை அவனுக்குப் பணஆசை இருந்திருக்கலாம். அத்தோடு இயேசுவின் பாதத்தில் மரியாள் ஊற்றிய நறுமண தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்றுத் தரித்திருக்குக் கொடுத்திருக்கலாமே; வீணாக ஏன் இயேசுவின் பாதத்தில் ஊற்றவேண்டும் என ஆலோசனை கூறியவனும் இதே யூதாஸ்தான் (யோவான் 12:5). இவனுக்கிருந்த இந்த அளவுக்கதிகமான பண ஆசையை பிசாசானவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான் (யோவான் 13:2). அவன் அத்தூண்டுதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இடம் கொடுத்ததால் சாத்தான் அவனுக்குள் புகுந்துவிட்டான் (லூக்.22:3).

இவ்விதமாகத்தான் பாவம் நம்மை அடிமைகளாக்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது நமது வாழ்வைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவரும். இதற்கு மூலக்காரணமானவன் சாத்தானே. நமது பெலவீனங்களை அவன் அறிந்து அதனூடாக நம்மை வீழ்த்த முயற்சிப்பான். அதற்கு நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பாவம் என்று தெரிந்ததும் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். அதாவது பிசாசு கொண்டுவரும் ஆசைகளுக்கும், பாவசோதனைகளுக்கும் நாம் எதிர்த்து நிற்க பழகிக் கொள்ளவேண்டும் (யாக்.4:7). எதிர்த்துநின்றால் அவன் நம்மைவிட்டு ஓடி விடுவான். பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2தீமோத்.2:22) என்று பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார். ஆகவே பாவம் நம்மைப் பிடிக்கும் தன்மை கொண்டதால், அதற்கு விலகி ஓடுவதே அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கச் சிறந்த வழியாகும். நமது பெலவீனங்களை எண்ணிப் பார்க்காமல், நமக்குள்ளே இருக்கும் பெலத்தை எண்ணிப்பார்த்தால் பாவம் நமக்கு முன்னே நடுங்கும்.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, சாத்தானின் தந்திரங்களை அறிந்து ஜாக்கிரதையுள்ளவர்களாய் எங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளவும், அவனுடைய மாயவலையில் சிக்கிடாது அதற்கு விலகி ஜீவிக்க உமதருள் தாரும் . ஆமென்.