நம்மை விசாரிக்கிறவர்

தியானம்: 2026 செப்டம்பர் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: 1பேதுரு 5:6-11

YouTube video

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது. 5:7).

இப்புதிய மாதத்தை தந்த கர்த்தாதி கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். கர்த்தர் உங்கள் முன்னே போவார் (ஏசாயா 52:12) என்ற வாக்குப்படி கர்த்தர் நமக்கு முன்னேசென்று பாதைகளைச் செவ்வைப்பண்ணி, நம்மனைவரையும் ஆசீர்வாதமாய் நடத்துவார்.

எனக்கென்று யாருமேயில்லை, எங்களது துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள எவருமேயில்லை, என்று வேதனைப்படுகிறவர்கள் பலர். இதோ, கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர் என்று பேதுரு நம்மைத் தைரியப்படுத்துகிறார். ஆம், கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர்; அவர் நமக்காகப் பரிதபிக்கிறவர். நமக்கு ஆறுதல் அருளுகிறவர்; நம் கண்ணீரைத் துடைக்கிறவர். அவர் நம் வாழ்வில் எல்லாவற்றுக்கும் போதுமானவராக இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தேவன் நமக்கு இருந்தாலும் நாம் பல தடவைகளில் சோர்வுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். நமது தேவை சந்திக்கப்பட தாமதிக்கும்போது மனமடிவாகி விடுகிறோம். நமது நியாயங்கள் புரட்டப்படும்போது, நம்மை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதபோது கலங்கிவிடுகிறோம். நம்மை அன்புடன் விசாரித்து ஆறுதல் வார்த்தை கூற யாரும் இல்லையே என்று கவலைப்படுகிறோம். அந்தவேளைகளிலெல்லாம் நம்மை விசாரிக்க ஒருவர் நமக்கிருக்கிறார், நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட முடியும் என்பதை நாம் மறந்துவிடுவது ஏன்? பேதுரு எழுதிய இந்த வசனத்தை, “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் விட்டெறிந்து விடுங்கள்” என்று ஒருவர் சொன்னார். உண்மைதான், நமது பாரங்களைச் சுமக்க ஆண்டவர் நமக்கு இருக்கும்போது ஏன் நாம் வீணாய் சுமக்கவேண்டும்?

ஆகாரின் வாழ்க்கையைப் பாருங்கள். சாராயின் கையின்கீழ் அடங்கியிருக்க விரும்பாமல் ஓடிப்போனாள். வனாந்தரத்தில் கர்த்தருடைய தூதனானவர் அவளைச் சந்தித்து, “எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (ஆதி.16:8) என்று விசாரித்து, அவளை ஆறுதல்படுத்தி, நாச்சியாரிடத்துக்கு திருப்பி அனுப்பியும் வைக்கிறார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில், ஆபிரகாம், ஆகாரையும், பிள்ளையையும் அனுப்பிவிட்டபடியினால், வனாந்தரத்தில் அவள் அலைந்து திரிந்தபோது, அவள் கொண்டுவந்த தண்ணீர் செலவழிந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாதநேரம், ஆகார் பிள்ளையைச் செடியின் கீழ் விட்டுவிட்டு, பிள்ளை சாகிறதை தான் பார்க்கமுடியாது என்று தூரத்திலே போய் உட்கார்ந்து, சத்தமிட்டு அழுதாள். அவளின் சத்தத்தைக் கர்த்தர் கேட்டார். அவளின் அலைச் சலைக் கர்த்தர் கண்டார். “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது? பயப்படாதே” (ஆதி.21:17) என்று அவளை விசாரித்து ஆறுதல்படுத்தினார். தாகத்தைத் தீர்க்க அவளுக்கு தண்ணீர்த் துரவையும் காண்பித்தார். கர்த்தர் ஏதோ கடமைக்காக நம்மை விசாரிக்கிறவர் அல்ல; மனதுருக்கத்துடன், கருத்துடன் விசாரிக்கிறவர். அன்று ஆகாரை விசாரித்தவர் நம்மைக் கைவிடுவாரா? ஆகவே, தைரியத்துடன் நமது பாரங்கள் துக்கங்களை அவர்மீது விட்டெறிந்து விடுவோமாக. அவர் பார்த்துக்கொள்வார்.

ஜெபம்: தகப்பனே, நீர் எங்களை நினைத்து விசாரித்து தேற்றுகிறீர். ஸ்தோத்திரம். ஆமென்.