ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவருமாகிய தேவனின்” நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இம்மாத தியானப்புத்தகம் சரியான நேரத்தில் பங்காளர்களுக்கு அனுப்பிவைக்க கர்த்தர் பாராட்டின கிருபைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களோடு சேர்ந்து நாங்களும் தேவனை மகிமைப்படுத்த அது ஏதுவாயிருக்கும். தியானபுத்தகத்தை தங்கள் விசுவாச நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
ஜுலை 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற போதகர், பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவி செய்தார். கருத்தரங்கில் பங்குபெற்ற பங்காளர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஊடகங்கள் மூலமாகவும் மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும் அநேகமாயிரமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. வசனம் வெறுமையாய் திரும்பாமல் கர்த்தர் அனுப்பின காரியமாகும்படி வாய்க்க உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுஙகள்.
இவ்விதழில் செப்டம்பர் மாத தியானங்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், மிஷனரிபணியைக் குறித்த தரிசனம், மிஷனரிபணிகளில் உள்ள சவால்கள், பணித்தளங்களில் உள்ள பிரச்சனை மற்றும் தேவைகளை நாம் அதிகம் அறிந்துகொள்ளும்படியாக மிஷன்பணிகளைப் பற்றிய தியானங்களை அக்டோபர் மாதத்திற்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இத்தியானங்கள் நமது ஜெபவாழ்விற்கு அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்கும். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள்.
ஆ.ஜான் துரை