தேவனின் ஆளுகை!
அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி
வேதபகுதி: சங்கீதம் 47: 1-9; ஏசாயா 42: 1-8
தேவன் ஜாதிகள் மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார் (சங்கீதம் 47:8).
“உலகமயமாக்கல்: என்ற வார்த்தையை, இஸ்ரவேலின் கோத்திரப்பிதாக்கள், சங்கீதக்காரர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் கேட்டதில்லை. ஆனாலும் அவர்கள் உலகளாவிய தன்மையில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். யேகோவா யூதர்களின் தெய்வம் அல்ல; அவர் “பூமியின் இராஜாக்களுக்கு அதிபதி” (வெளி 1:5). கர்த்தருடைய பார்வையில் தேசங்கள் ஏற்றச்சாலில் தொங்கும் துளி போலவும், தராசிலே படியும் சிறு தூசிபோலவும் (ஏசாயா 40:15); இருக்கின்றன. ஆனால் அவை தேவனுடைய சத்திய வசனத்தின் விதையை விதைக்கும் வயல்களான திருச்சபையாகும் (மத்.28: 18-20). “உமது ராஜ்யம் வருக” என்று ஜெபிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் தேசங்களுக்கான வசன விதைப்பு ஊழியம் அவசியமானது.
தேவன் தேசங்களை உண்டாக்கினார்:
“மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்தார்” (அப்.17:26). உலகம் ஆதாம் ஏவாளுடன் தொடங்கி, பெருவெள்ளத்திற்குப் பிறகு (ஆதி.10-11) பல தேசங்கள் வளர்ச்சிபெற்று வியாபித்தன. பழைய ஏற்பாட்டின் முதன்மை கவனம் இஸ்ரவேலை நோக்கி இருந்தாலும் அதில் பல்வேறு பிற தேசங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் உலகின் ஒவ்வொரு தேசத்திற்கும் நற்செய்தியைக் கொண்டு செல்லும்படி கிறிஸ்துவின் “மாபெரும் கட்டளை” நம்மை வலியுறுத்துகிறது (லூக்.24:46-49).
தேவன் தேசங்களைத் தாங்குகிறார்:
“ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்”; வெவ்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வளங்களைக் கொண்டிருந்தாலும் தேவனருளும் சூரியஒளி, மழை. உணவு, காற்று மற்றும் மண் வளங்களை தேசங்கள் சார்ந்துள்ளன. இவையும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. நமது தொலைபேசிகளில் குறைந்தது இருபத்திரண்டு வெவ்வேறு நாடுகளின் பொருட்கள் உள்ளன என்பதை நான் அறிகிறேன். இங்குதான் உலகமயமாக்கல் வருகிறது.
தேவன் காலங்களையும் எல்லைகளையும் நிர்ணயிக்கிறார்.
“அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் நிர்ணயிக்கிறார்” (அப்.17:26). தேசங்களும் பேரரசுகளும் தோன்றி மறைகின்றன. தேசிய எல்லைகள் மாறுகின்றன; ஆனால் அதன் வரலாறும் புவியியலும் கர்த்தரின் கைகளில் உள்ளன. தேசங்களின் தலைவர்களை அவரே தோன்றப்பண்ணுகிறார். “அவர் இராஜாக்களை நீக்கி, இராஜாக்களை ஏற்படூத்துகிறவா”; (தானி. 2:21). “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” (தானி. 4:32). “தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்” (சங். 75:7). தலைவர்கள் செய்த சுயநலமான மற்றும் செயல்களுக்கு தேவன்தான் காரணம் என்று இதற்கு பொருளாகாது. நாம் ஒவ்வொருவரும் நமது முடிவுகளுக்குப் பொறுப்பாளர்கள். தேவன் தமது சித்தத்தை நிறைவேற்ற மனந்திரும்பாத அரசாங்கத் தலைவர்களைக்கூட பயன்படுத்தமுடியும். தமது மக்களான இஸ்ரவேலரைத் தண்டிப்பதற்காகப் புறஜாதிதேசங்களையும், இயேசு பெத்லெகேமில் பிறப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க ரோமானியப் பேரரசரையும் பயன்படுத்தினார்.
“கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப்.17:27). பழைய ஏற்பாட்டுக் காலங்களில் “புறஜாதியாருக்கு ஒளியாக இருக்க இஸ்ரவேலர் அழைக்கப்பட்டனர் (ஏசாயா 42:6; 49:6). ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்தனர். இக்காலத்தில் திருச்சபையார் மூலமாக இச்சுவிசேஷ ஒளி உலகம் முழுவதும் செல்ல வேண்டும் (லூக். 2:32; அப். 13:42-47). தேசங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் செய்துள்ளன (சங். 2:1-3), ஆனாலும் அவருடைய அழைப்பு யூதர்கள் மற்றும் புறஜாதியார் இருவருக்கும் சமமாக இன்றும் செல்கிறது (சங்.2:10-12).
கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை கிறிஸ்துவுடனேகூட எழுப்பி, தம்முடன் உட்காரும்படிச் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (எபே.2:5-6). அவர் நம்மை ராஜாக்களாக்கியுள்ளார் (வெளி.1:5-6). மேலும், நாம் “கிறிஸ்து இயேசுவின் மூலமாக ஆளுகை செய்ய முடியும் (ரோமர்5:1). தேவனுடைய புதிய வானம் புதிய பூமியில் சதாகாலமும் என்றென்றைக்கும் அரசாளமுடியும் (வெளி. 22:3-5).
நாம் வாழும் தேசத்தில் மார்க்கம் தப்பி நடந்தோரை சத்திய வழிக்குள் வரவழைக்க அவர்களுக்காக ஜெபிக்கவும், நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும் நம்மால் இயன்றதனைத்தையும் செய்ய மறக்கவேண்டாம். தேவன், “சகல கோத்திரம், பாஷை, ஜனங்கள், ஜாதிகள்” அனைவரையும் மீட்க விரும்புகிறார் (வெளி.5:9). தேவன் ஒவ்வொரு தேசத்தின் மீதும் ஆளுகை செய்கிறார். உங்களுடைய வாழ்க்கையின் மீதும் அவருக்கு ஆளுகை உண்டா?
(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)