வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!
வேதாகமம் உருவானது எப்படி? (செப்டம்பர் – அக்டோபர் 2026)
Dr.உட்ரோ குரோல்
மொழிபெயர்ப்புகளில் வேறுபாடுகள் தோன்ற காரணம் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைக்கும் வேதாகமப் பிரதி நகல்கள் வித்தியாசப்படுவதேயாகும். ஒரு மொழிபெயர்ப்பாளர் தன்னிடம் கொடுக் கப்பட்டிருக்கும் கைப்பிரதியையே மொழி பெயர்ப்பார். ஒவ்வொரு குழுவும் பயன் படுத்தும் மூல கையெழுத்துப் பிரதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அடித்துவிட அல்லது எடுத்துவிட எவரும் சதித்திட்டம் தீட்டுவதில்லை. கையெழுத்துப் பிரதிகளில் ஒரு நிகழ்ச்சி பற்றிய விளக்கத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். எதைப் பயன்படுத்துவது? என்பது மொழி பெயர்ப்பாளரின் முன்னுள்ள பிரச்சனை.
ஒவ்வொரு பிரிவும், குழுவும் ஏன் இப்படிக் குறைபாடும், மாற்றங்களும் உள்ள கையெழுத்துப் பிரதிகளைத் தெரிந்தெடுக்கின்றன? என்னும் கேள்வி வருகிறது. சில கையெழுத்துப் பிரதிகளில் தோல் அல்லது பாப்பிரஸ் சிதைவடைந்திருக்கும், கிழிந்திருக்கும், ஒரு துண்டு இல்லாமல் இருக்கும். சில இடங்களில் எழுத்துக்கள் மங்கி, வார்த்தை என்ன? என்று அறியமுடியாமல் இருக்கும். இவைகளை மொழிபெயர்க்கும்போது வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா? ஆனால் மொழிபெயர்ப்பாளர் அனைவருடைய எண்ணங்களும், நோக்கங்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும்.
ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்புடன் தான் நான் வளர்க்கப்பட்டேன். நான் மனப்பாடம் பண்ணியிருக்கும் வேதவசனங்கள் எல்லாம் அதில் உள்ளவைகளே. எனக்குப் புதுப்பிக்கப்பட்ட ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்பும் பிடிக்கும். ஏனெனில் அதில் சில வார்த்தை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் சந்தோஷத்தைத் தரும்.
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வேதாகம் வாசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சுலபமாய் இருக்கிறது. சர்வ தேசப்பதிப்பைப் படிக்கும்பொழுது எழுத்தாளர்களான பவுல், பேதுரு, யாக்கோபு இவர்களின் நோக்கம் எனக்குப் புரிந்து விடுகிறது. அவர்களுடைய நிருபங்களின் முதல்பிரதி அதை வெளிப்படுத்துகிறது.
சரி. எந்தப் பதிப்பு சிறந்தது? அது நீங்கள் விரும்பி வாசிக்கும் வேதாகமம்தான்! நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பை மிக நல்லது என்று கூறிக்கொண்டு, அதை வாசிக்காமல் இருந்தால் அதனால் பலன் என்ன?
நீங்கள் உங்களுக்கு ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்பு பிடிக்கும் என்று கூறுவீர்களானால், அதைத் தினமும் விரும்பி வாசியுஙகள். நீங்கள் சர்வதேசப்பதிப்பு வேதாகமத்தைப் பிடிக்கிறது என்று கூறுவீர்களானால் அதை வாசியுங்கள். வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக வசனங்களை ஆக்குங்கள். வேதவசனங்களின்படி உலகில் வாழ்ந்து காட்டுங்கள்.
வேதாகம மொழிபெயர்ப்புகளைப் பற்றி வாதம் செய்வதை விட்டுவிட்டு, அதை வாசிக்கத் தொடங்கிவிடுவோமானால் அது நம் அனைவருக்கும் நல்லது. நாம் பரலோகத்திற்குச் சென்று சேருவது வரை உலகத்தில் இருக்கும் வேதாகமக் கைப்பிரதிகளில் சிறந்தது எது? உண்மையானது எது? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.
இன்று அது நமக்கு ஒரு விசுவாசச் செயலாக இருக்கிறது. அந்த விசுவாசத்தைச் செயல்படுத்துங்கள். இதுகுறித்து உங்களோடு வாதம் செய்கிறவர்கள், மறுத்துப் பேசுகிறவர்களிடம் இரக்கமாயிருங்கள். ஆத்திரப்படாதேயுங்கள்.
வேதாகமத்தை வாசியுங்கள்! கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள்! கர்த்தருடைய வசனம் உங்களை மாற்றட்டும். அப்படி நடக்குமானால் உங்க ளிடம் வேதாகமத்தின் சரியான மொழி பெயர்ப்பு உள்ளது.
அதிகாரம் – 4
வேதாகமத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள்
ஜான் விக்ளிஃப்
சீர்திருத்தத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் ஜான் விக்ளிஃப். விடிவெள்ளி என்பது அதிகாலையில் சூரியஉதயத்துக்கு முன் கிழக்குதிசையில் ஆகாயத்தில் காணப்படும் பிரகாசமான ஒரு நட்சத்திரம்.
அவர் இங்கிலாந்தில் யாக்ஷையர் என்னுமிடத்தில் இப்ஸ்வெல் என்னும் கிராமத்தில் 1330இல் பிறந்தார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்லியோல் என்னும் கல்லூரியில் பயின்றார். தன் படிப்பை முடித்தபின் அதே கல்லூரியில் ஆசிரியர் ஆனார். அதன்பின் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் அவருக்குத் தொடர்பு இருந்ததுபோல் தோன்றுகிறது. அவரது கல்லூரியில் ஆசிரியர் குழுவில் இவரே மிகவும் திறமையும் புகழும் பெற்றவராக கருதப்பட்டார்.
1372ஆம் வருடத்தில் இறையியலில் அறிவர் பட்டம் வென்றார். 1374 இல் இங்கிலாந்தின் மன்னர் இவரை லட்டர்வொர்த் தேவாலயத்தின் போதகராக நியமனம் செய்தார்.
விக்ளிஃப் ஒரு சமயச் சீர்திருத்த வாதியைப் போல எங்கும் பேசினார். ரோமாபுரியில் போப்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆக்ஸ்போர்டிலும், லண்டனிலும் தைரியமாகப் பேசினார். அதேவேளையில் இவர் தனது சீர்திருத்தக் கருத்துக்களைச் சிறுசிறு கையடக்க துண்டுப்பிரதிகளாக அச்சிட்டு வெளியிட்டார். 1377 இல் ரோமாபுரியின் சபை நிர்வாகம் குறித்து விக்ளிஃப் தெரிவித்த எதிர்ப்புக்கருத்துக்கள் இவரை எல்லோரும் அறியச் செய்துவிட்டது. எனவே இவரை விசாரிக்கும்படி லண்டனின் பிஷப் இவரை தூய பவுல் பேராலயத்திற்கு வரும்படி கட்டளையிட்டார்.
1378இல் இவர் “பரிசுத்த வேதாகமத்தின் உண்மைத்தன்மை” என்னும் தலைப்பில் ஒரு செய்தியை அச்சிட்டு வெளியிட்டார். அதில் “வேதாகமத்தில் எந்தப் பிழையும் இல்லை; வேதாகமம் முழுவதிலும் தேவனுடைய வெளிப்பாடு இருக்கிறது” என்று வலியுறுத்தினார்.
விக்ளிஃப் தைரியமாக, அந்நிய ஆக்கிரமிப்புகள் மத்தியில் ஆங்கிலேயர்களின் உரிமைகள் பற்றியும், இங்கிலாந்து திருச்சபையில் நுழைந்து கொண்டிருக்கும் தீமைகள், தவறுகள், கெட்ட பழக்கங்கள் இவற்றையும் சுட்டிக்காட்டி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்