ஒரு தாய் தேற்றுவதுபோல்!
தியானம்: 2026 செப்டம்பர் 2 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 66:10-14

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (ஏசாயா 66:13).
“தேற்றுவது”, ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் இந்த அனுபவத்துக்காக ஏங்கத்தான் செய்கிறான். இது வெறுமனே விசாரிப்பதோ, உதவுவதோ, பகிர்ந்துகொள்வதோ அல்ல; மாறாக, ஒரு அரவணைப்பு, “நான் உனக்கு இருக்கிறேன்” என்கிற ஒரு உத்தரவாதம், “உன் இதய பாரத்தை நான் அறிவேன், நானும் உன்னுடன் உன் பாரத்தைச் சுமப்பேன்” என்று கொடுக்கின்ற ஒரு உறுதிப்பாடு. இதனை உண்மைத்துவமாய் தரக்கூடிய ஒரேயொருவர் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் ஒருவரே! அதேநேரம், உலகில் நமக்கு அருளியிருக்கின்ற தேற்றும் பாத்திரமாக, பிரதிநிதியாக இருப்பவள் தாய் என்றால் அதற்கு நிகரில்லை. அவள் தன்னுயிரையும் பாராமல், தாங்கொண்ணாத பிரசவ வலியையும் பொருட்படுத்தாது, நம்மைப் பெற்றெடுத்தவள், அந்தத் தாய் நம்மைத் தேற்றுவதுபோல இன்பமானது ஒன்றுமில்லை. தாயன்பிற்கு நிகர் தாயன்புதான், உலகில் எதை மாற்றினாலும் தாயை மாற்றவேமுடியாது. தாயானவள் மூப்பெய்தினாலும், பிள்ளைகள் அவளை ஒதுக்கினாலும், அவள் தன் பிள்ளைகளில் கொண்டிருக்கும் அன்பு குறைந்துபோகாது. ஆக, ஒரு தாய் நம்மைத் தேற்றுவதுபோல உங்களைத் தேற்றுவேன் என்று கர்த்தர் கூறுகிறார் என்றால், மறுபக்கத்தில் நமது தாயின் அன்பில், தேவன் நம்மில் வைத்திருக்கும் அன்பை நாம் உணர்தல் வேண்டும்.
“ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசா.66:13). ஆம், எருசலேம் என்றால் கர்த்தரின் சமுகத்தைக் குறிக்கிறது, துன்ப, துயரங்கள் சூழும்போது அம்மாவிடம் அதனைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில்தான் அவள் நம்மைத் தேற்றுகிறாள். இவ்விதமாகவே பாடுகள், நெருக்கங்கள் சூழ்ந்து கொள்ளும்போது கர்த்தரை நாம் நாடும்போது அவர் நம்மை நிச்சயம் தேற்றுவார், ஆறுதலளிப்பார். கர்த்தர் நம்மைத் தேற்றுவதைக் காணும்போது நமது இருதயம் மகிழ்ந்து, எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும் என்கிறார் ஏசாயா. சாதாரணமாக உலகில் நாம் தேற்றப்படும்போது சோர்வு நீங்கப்பெற்று புத்துணர்வு அடைகிறோம். இப்படியிருக்க, கர்த்தரே நம்மைத் தேற்றுவாரானால் எப்படியிருக்கும்!
கர்த்தரின் சமுகத்தை ருசித்த தாவீது, “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்.16:11) என்கிறார். தாயின் அரவணைப்பில் நமது தேவனுடைய ஆறுதலை உணர்ந்து அதைக் காண நமது கண்களைத் திறக்கும்படிக்கு ஜெபிப்போமாக. தினமும் கர்த்தரின் சமுகத்தை வாஞ்சித்து, அவர் அருளுகின்ற ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோமாக.
ஜெபம்: எங்களைத் தேற்றும் தெய்வமே, எங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது உம்முடைய ஆறுதல்களால் எங்களைத் தேற்றி உயிர்ப்பிக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.