தேவன் நன்மையானதையேத் தருவார்

தியானம்: 2026 செப்டம்பர் 5 சனி | வேத வாசிப்பு: சங்.85:7-13; மத்தேயு 7:7-12

YouTube video

கர்த்தர் நன்மையானதைத் தருவார் (சங். 85:12).

நம்மைச் சுற்றிலும் நன்மைகளும் தீமைகளும் குவிந்திருக்கின்றன. “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக்.1:17). ஆம், ஆண்ட வரிடத்தில் தீமையும் இல்லை; தீமையான காரியங்களும் இல்லை. அவர் நன்மைகளின் ஊற்றாயிருக்கிறார். தீமையோ சத்துருவின் பண்டகசாலையில் நிறைந்து வழிந்து மனிதரிடம் கடந்துவருகிறது. நாம் அதற்கு இடமளிக்காவிட்டால் தீமை நம்மை அணுகமுடியாது. நம்முடன் நன்மைகளின் பிதா இருக்கிறாரல்லவா!

கர்த்தர் நன்மையானதைத் தருவார் என்பது தாவீதின் அனுபவமாகும். தாவீது தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளுக்கூடாகவும் கர்த்தரை நன்கு ருசி பார்த்தவராக இருந்தார். சீமேயி தாவீதை நோக்கி, “இரத்தப் பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்து போ. தொலைந்து போ” என்று தூஷித்தபோதும், தாவீது அதைக் கேட்டு கலங்கிவிடவில்லை. “அவன் என்னைத் தூஷிக்கட்டும். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்” என்றான் (2சாமு.16:12). அத்தனை நிந்தைகளையும் கர்த்தர் தாவீதுக்கு நன்மையாக மாற்றிக் கொடுத்தார். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, உங்கள் பரமபிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்.7:11) என்று இயேசு கூறினாரே. நாம் நம் பெற்றோரிடம் அப்பத்தைக் கேட்கும்போது, கல்லைத் தருவார்களா? மீனைக் கேட்டால் பாம்பைத் தருவார்களா? இல்லையே! பொல்லாத மனுஷர்களே இவற்றைச் செய்யாதிருக்கும்போது, நம் பரம பிதா நமக்குத் தீமை அணுகவிடுவாரோ? நமக்கு நன்மையில்லை என்று நமது கண்களுக்குத் தெரிகிறவைகளுக்குள்ளும் அவர் நமக்கான நன்மையையே வைத்திருப்பார். அதை நாம் நம்பவேண்டும். சகல நன்மையும் தேவனிடமிருந்தே வருகின்றது.

தேவனுடைய பிள்ளை தனக்கு விவாக துணையாக வரவேண்டுமென்று நாம் காத்திருந்து ஜெபிக்கும்போது, கர்த்தர் ஒரு அவிசுவாசியை நமக்குத் துணையாக நிச்சயமாகவே தரமாட்டார். நல்ல ஒரு தொழிலுக்காக ஜெபிக்கும்போது, தாமதித்தாலும் கர்த்தர் நல்ல வேலையையே தருவார். சிலசமயம் நமது பார்வையில் நமக்குத் திருப்தியற்றதாக இருந்தாலும், கர்த்தரின் பார்வையில் அது நன்மையாகவே காணப்படுகிறது. நமது பரமபிதா நமக்கு எப்போதும் நன்மையானதையே செய்வார் என்ற உறுதி நம் உள்ளத்துக்குள் எப்போதும் இருக்கவேண்டும்.

ஜெபம்: “நன்மைகளின் ஆண்டவரே, உமது பார்வைக்கு நலமானதை எங்களுக்குத் தந்தருளும். அதுவே எங்கள் வாழ்க்கைக்கு நிறைவாயிருக்கும். ஆமென்.”