யார் சபிக்கப்பட்டவன்!

தியானம்: 2026 செப்டம்பர் 7 திங்கள் | வேத வாசிப்பு: எரேமியா 17:1-8

YouTube video

மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் (எரேமி.17:5).

நமது நம்பிக்கையை, யாரிடத்தில், எதன்மீது வைத்திருக்கிறோம்? இதுவரை நம்மை நடத்திய கர்த்தரை மறந்து, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும், நாளை மாறிப்போகும் மனுஷரிலும் நம்பிக்கை வைத்து நமது காரியங்களை முன்னெடுப்போமானால் அதன் விளைவையும் நாமே அனுபவிக்கவேண்டி நேரிடும். யூதா மனுஷரின் நிலைமை அப்படித்தான் அன்று இருந்தது. இதனால் கர்த்தர் துக்கங்கொண்டு எரேமியாமூலம் கொடுத்த எச்சரிப்பையே இன்று வாசித்தோம்.

பின்மாற்றமடைபவர்கள் மனுஷர்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தமக்கு புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரைவிட்டு நாளுக்கு நாள் விலகிச் செல்கிறார்கள். இப்படியாகப் பின்வாங்கும் இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் கூறுகிறார். அதுமாத்திரமல்ல, “சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதனால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசா.31:1) என்றும் வார்த்தை கூறுகிறது. நெருக்கங்கள் வந்தபோது, சகாயத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தரைத் தேடாமல் அன்று இஸ்ரவேல், தாம் விட்டுவந்த எகிப்துக்குத் திரும்பிப் போகலாம் என்று முறுமுறுக்கிறார்கள். எகிப்து எதைக் காண்பிக்கிறது? உலகத்தைக் குறிக்கிறது. முன்னொரு காலம் கர்த்தர்மேல் நம்பிக்கையை வைத்துத்தான் உலகமாகிய எகிப்தைவிட்டு, அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்டு எடுத்த கர்த்தரிடத்தில் இவர்கள் வந்தார்கள். பின்பு மறுபடியும் உலகத்துக்குள்ளே போக எத்தனிக்கிறார்கள். இரதங்கள், குதிரை வீரர்கள், பெலசாலிகள் எதைக் குறிக்கிறது? உலக ஐசுவரியங்களையும், உறவினர், நண்பர்களையும், மொத் தத்தில் உலகம் காண்பிக்கும் மாயையான பாதுகாப்பையே இது காண்பிக்கிறது.

இன்று அநேகரின் நிலை இதுதான். முன்பு சிறிய காரியங்களுக்குக்கூட கர்த்தரையே நாடி ஜெபித்துக் காத்திருப்பார்கள்; படிப்படியாக மனித உதவிகளை நாடி ஓடி, மனுஷர்மேலேயே தங்கள் நம்பிக்கையை வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய வாழ்வு எப்படியிருக்கும் என்று எரே.17:7-9 தெளிவுபடுத்தியுள்ளது. “கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” வார்த்தை சத்தியம். அதை நம்பாமல், கர்த்தரைவிட்டு விலகி, தம் வாழ்வில் சாபங்களையும், கேட் டையும் வருவித்துக்கொள்கிறவர்கள் இன்று ஏராளம். என்னதான் நேரிட்டாலும் கர்த்தரை விட்டு விலகிப்போகும் இருதயம் நமக்குள் வந்துவிடாதபடி நாம் எச்சரிப்புடன் இருப்போமாக. துன்பமோ, துயரமோ எதுவாக இருந்தாலும் கர்த்தரையே நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோமாக.

ஜெபம்: கர்த்தாவே, மனுஷனை நம்பி உம்மைவிட்டு விலகி சாபத்துக்குள்ளாகாதபடி, உம்மிடத்திலே மாத்திரம் முழுநம்பிக்கையுள்ளவர்களாய் ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.