கர்த்தரே நம்மை வனையட்டும்!

தியானம்: 2026 செப்டம்பர் 10 வியாழன் | வேத வாசிப்பு: எரேமியா 18:1-6

YouTube video

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான் (எரேமி.18:3).

குயவனுடைய மண்பாண்டங்கள் எப்படி அழகான பாத்திரமாக வெளிவருகிறது? இதை அறியவேண்டுமானால், குயவனுடைய தொழில் இடத்திற்குப் போகவேண்டும். மிகவும் ஆச்சரியமாயிருக்கும். ஒரு மண் பாண்டத்தைச் செய்ய முதலாவதாக, அதற்குரிய மண்ணைத் தெரிந்தெடுத்திருப்பான். அது களிமண்ணாக இருக்கும். அந்தக் களிமண்ணை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து காலினால் மிதிப்பான். அது மிகவும் கடினமான வேலை. அப்படிச் செய்யும்போது, அதிலுள்ள சிறு கற்கள் கட்டிகளை அகற்றுவான். அந்தக் களிமண் சரியான பதத்திற்கு வரும்வரை இது நடக்கும். சிறு கற்கள் கட்டிகள் இருந்தால் வனையப்படும் பாத்திரம் வெடிப்பு ஏற்பட்டு உடைந்துவிடும். ஆகவே, ஏற்ற களிமண்ணைத் தயார்செய்யும் வேலை மிகவும் முக்கியமானதும், கடினமானதுமாகும். மண் தயாரானதும் அந்த மண்ணை அளவான உருண்டையாகத் திரட்டி, திரிகையிலிடுவான். ஒருவன் திரிகையைச் சுழற்ற, மற்றவன் தன் கைகளினால் அந்த மண்ணில் விளையாடுவது என்றுதான் சொல்லவேண்டும், அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

களிமண், வெறும் களிமண்ணாக இருக்கும்வரைக்கும் எந்தப் பயனுமிராது. அது குயவனின் கைக்குள் வரவேண்டும். அடுத்தது, அது ஒரு அழகான பாத்திரமாக வெளிவரவேண்டுமென்றால், அது எவ்வளவுதூரம் அடிக்கப்பட்டு உதைக்கப்பட்டு மிதிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்த்தால்தான் விளங்கும். எவ்வளவு பாடுகள்! இவ்விதமாகவே பரம குயவனாகிய கர்த்தரின் திருக் கரத்தினால் மிதிக்கப்பட்டு உதைக்கப்பட்டு வனையப்படவில்லையானால் நமது வாழ்வில் என்னதான் பயன் உண்டாகும்?

ஆக, அவர் நம்மை வனைய நாம் நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும். கர்த்தர் நம்மை தினமும் உருட்டி, குழைத்து வனையும்போது நம்மிடம் காணப்படும் கோபம், மனமேட்டிமை, எரிச்சல், பொறாமை, கீழ்ப்படியாமை போன்ற கற்கள் நம்மைவிட்டு அகன்றுவிடும். கர்த்தருக்கேற்ற பாத்திரமாக நாம் வனையப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டுமானால் பாடுகள், உபத்திரவங்களுக் கூடாகக் கடந்து செல்லத்தான் வேண்டும். ஆனால் உகந்த பாத்திரமாக அவர் கையில் இருப்பதுபோன்ற பாக்கியம் வேறு என்ன இருக்கப்போகிறது?

திருக்கரத்தால் தாங்கி என்னை, திருச் சித்தம்போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான், அனுதினம் நீர் வனைந்திடுமே!!

கர்த்தர் நம்மைத் தமக்கேற்ற பாத்திரமாக அனுதினமும் வனைந்துகொள்ள, நமது சுய சித்தத்தை வெறுத்து, அவர் சித்தத்துக்கு நம்மை ஒப்படைப்போம்.

ஜெபம்: அன்பின் தகப்பனே, நாங்கள் உமது கையிலிருக்கிறோம். உம் சித்தம்போல் எங்களை வனைந்தருளும், உமது திருவுளச்சித்தம் பூரணமாய் நிறைவேற எங்களை முற்றிலுமாய் ஒப்புவிக்கிறோம். ஆமென்.