கர்த்தரின் நாமம்
தியானம்: 2026 செப்டம்பர் 15 செவ்வாய் | வேத வாசிப்பு: ஏசாயா 9:1-8

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் (நீதிமொழிகள் 18:10).
நாமம் அல்லது பெயர் என்பது மிக முக்கியம். அது ஒருவருடைய அடையாளம் மாத்திரமல்ல, குணநலன்களுடனும் சம்மந்தப்பட்டது. கருவில் ஒரு பிள்ளை உருவாகிவிட்டாலே அதற்கு என்ன பெயர் வைப்பது என்று பெற்றோர் இன்று அலைகிறார்கள். சாஸ்திரங்களை நாடுகிறவர்கள் பலர், எண் ஜோதிடத்தை நாடுகிறவர்களும் பலர். இன்னும் சந்ததிப் பெயரைச் சம்மந்தப்படுத்தி பெயரைத் தேடுகிறவர்களும் உண்டு. தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்கள், நாட்டுத் தலைவர்கள் என்று அவர்களின் பெயர்களைத் தெரிவு செய்வதுமுண்டு. கிறிஸ்தவர்களோ, வேதத்திலுள்ள பெயர்களை தேடுவது வழக்கமாகிவிட்டாலும், இப்போதெல்லாம் கூகிள் உதவியுடன் எபிரெய மொழியில் பிடித்தமான அர்த்தமுள்ள, யாரும் வைக்காத பெயர்களைத் தேடுகிறார்கள். சிலசமயம் அர்த்தமே தெரியாத பெயர்களை வைத்து, பின்னர் அது தவறான அர்த்தத்தைக் கொடுப்பதையும் அறிகிறார்கள். பிள்ளையும் அந்தக் குணாதிசயத்துடன் வளருவதையும் காணலாம். ஆக, பெயர் தெரிவு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்து நாமும் கவனமாக இருப்பது நல்லது.
இங்கே, மனுக்குலத்தின் மீட்புக்கென்று ஒரு பிள்ளை வாக்களிக்கப்படுகிறார். அநாதியாகவே அவருடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. இவர் சாதாரண குழந்தை அல்ல; இவர் எதற்காக உலகில் வந்து பிறப்பாரோ, எதனை நடப்பிப்பாரோ அதற்குத் தக்கதாகவும், அவருடைய குணநலனுக்குத் தக்கதாகவும் பரம பிதாவானவர், அவருடைய பெயரை தீர்க்கர்கள் மூலமாக பல ஆண்டு களுக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டார். அந்தப்படி, கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா தீர்க்கன், “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு” என்ற நாமங்களையெல்லாம் அறிவித்தார். இவர் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னரே, அவருக்கு “இயேசு”, ஏனெனில் அவர் இரட்சகர் என்றும், அவருக்கு “இம்மானுவேல்” ஏனெனில் அவர் நம்மோடிருப்பார் என்றும் கர்த்தர் அறிவித்துவிட்டார். பெயர் சூட்டிவிட்டார்.
ஆம், கர்த்தருடைய இந்த நாமங்கள் யாவும் நமக்குப் பலத்த துருக மாயிருக்கிறது (நீதி.18:10). துருகம் என்றால் உயரமாக எழுந்து நிற்கும் கோபுரத்தைக் குறிக்கிறது. அது நமக்குப் பாதுகாப்பின் சின்னம். அந்தத் துருகத்துக்குள் யார் யார் கர்த்தரை நம்பி அடைக்கலம் தேடுகிறோமோ, அவர்களில் எவரும் கைவிடப்படுவதில்லை. இதையேதான் தாவீது, “தேவன் நான் நம்பியிருக்கிற துருகமும், என் கேடகமும், என் ரட்சண்யக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே” (2சாமு.22:3) என்று பாடி வைத்துள்ளார். கர்த்தருடைய நாமம் இன்று என் வாழ்வுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
ஜெபம்: அன்பின் தேவனே, வல்லமையும் பயங்கரமுமான உமது நாமத்தைமட்டுமே நம்பி நாங்கள் அடைக்கலம் புகுந்துள்ளோம். தீமை அணுகாதபடி காத்தருளும். ஆமென்.