அதிசயமானவர்!
தியானம்: 2026 செப்டம்பர் 16 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 77:1-20

அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே (சங்கீதம் 77:14).
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிகவும் வேகமாக முன்னேறி வரும் உலகிலே, பல அரிய காரியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நம்மை வியக்க வைக்கின்றன. அவைகளுள் ஒன்று “கணினி.” இன்று மனித ரோபோ உலத்தையே மிரட்டுகிறது. மனித வாழ்வையே தலைகீழாக மாற்றிவரும் விஷயங்களும் பல. தொழில்நுட்பங்களை நுட்பமாகச் செய்து, வான மண்டலத்திலே வலம் வர வைத்து, அதனூடாக ஆகாய மண்டலத்தையும் பூமி யையும் நோக்கிப் பார்த்து, அவற்றில் சில காரியங்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எத்தனிக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதிசயம்தான்! எனினும், இந்த விநோத கருவிகள் ஒரு இமைப்பொழுதில் சிதைவதுண்டு. ஆக, மேலான கட்டுப்பாட்டை ஒவ்வொரு மனித வாழ்விலும் கொண்டுவருகிற மேலான விஞ்ஞானி ஒருவரை, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துள்ளோம், இல்லையா! “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).
மனக்கலக்கத்துடன் இந்த 77ம் சங்கீதத்தைப் பாட ஆரம்பித்த சங்கீதக்காரன் ஆசாப், இதுவரை கர்த்தர் செய்த செயல்களை நினைவுகூருகிறான். “நம்முடைய தேவனைப்போல பெரிய தேவன் யார்” என்று சூளுரைக்கிறான். தம்முடைய ஜனத்தை அவர் எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மீட்கவில்லை. “தம்முடைய புயபலத்தினாலேயே மீட்டார்” என்கிறான். இறுதியிலே, “உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்” என்று பாடி முடிக்கிறான். எந்தத் தொழில்நுட்பமாவது இதைச் செய்யமுடியுமா? அவர் வார்த்தை ஒன்றே போதும்; தண்ணீர் பிரியும், காற்றும் கடலும் அமரும்; பிசாசுகள் ஓடும்; அவரால் செய்யமுடியாதது எதுவுமே இல்லை. ஆம், ஆசாப் பாடியதுபோல, “அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே.” இந்த தேவன் நமக்கிருக்கும்போது, நாளை மாறிப்போகின்ற அல்லது இல்லாமற்போகின்ற காரியங்களை நம்பி நமது வாழ்வை ஏன் வீணடிக்கவேண்டும்?
நவீனங்கள் நவீனமாகவே இருக்கும்; கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் அவை நம்மை ஆளுகை செய்ய இடமளிக்கக்கூடாது. நாமேதான் அவற்றை ஆளுகை செய்யவேண்டும். இன்று நாம் எதற்கு அடிமைகளாக இருக்கிறோம்? ஏற்கனவே பலவிதங்களில் வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கும் நாம், உலக அதிசயம் என்று எண்ணப்படுபவையினால் மேலும் தீட்டுப்படாதபடிக்கு, “ஒருவராய் அதிசயங்களைச் செய்கிற” தேவனிடம் சரணடைவோமாக. அவர் நம்மை ஆதரிப்பார்.
ஜெபம்: “ஆண்டவரே, தொழில்நுட்பங்கள் பெருகினாலும், உம்முடைய வார்த்தைக்கு அவைகள் ஒன்றும் ஈடாகாது. அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே. ஆமென்.”