ஆலோசனைக் கர்த்தர்!
தியானம்: 2026 செப்டம்பர் 17 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 139:12-24

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம் (சங்கீதம் 139:17).
ஒரு பாடசாலை அதிபருக்கு, பாடசாலையைத் திறமையாக நடத்த ஆலோசனை தேவை. ஒரு அதிகாரிக்கு, அவரது வேலை ஸ்தலத்தைக் கட்டுப்பாட்டோடு நடத்த ஆலோசனை தேவை. ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அரசனுக்கு, தலைவனுக்கு நாட்டை திறமையாக ஆள ஆலோசனைகள் தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சபையைச் சரியான பாதையில் வழி நடத்த, ஒரு ஊழியனுக்குக் கட்டாயம் ஆலோசனை தேவை. காரணம், “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்” (நீதி.11:14) என்கிறது வேதவாக்கியம். ஆனால், பலவேளைகளிலும் இந்த ஆலோசனைகளை வழங்குகின்ற ஆலோசனை வழங்குனராலேயே ஜனங்கள் கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு. இவர்கள் தவறான ஆலோசனைகளைத் தங்கள் தலைவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிகாரத்தில் இருப்பவர்களே கலக்கமடையும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.
தாவீது, தேவனாகிய கர்த்தரை நன்கு அறிந்திருந்தார். தன்னை ஒவ்வொரு அசைவிலும் அறிந்தவர் தேவனே என்பதை அறிந்திருந்தார். ஆகவே, ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும், அவர் கர்த்தருடைய வேளையை, வழிகளை விட்டு விலகவில்லை. மாறாக, தேவனுக்காகக் காத்திருந்தார். பல இன்னல்கள், கொலைமிரட்டல்கள்! என்றாலும், கர்த்தர் தன்னை அறிந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பினார். ஆதலால், மனுஷஆலோசனைகளுக்கு இடமளிக்கவில்லை. தன்னைக் கொல்ல துரத்திவந்த சவுல் இப்போது தனது கையிலே கிடைத்த போதும், கூட இருந்தவர்கள், கர்த்தர்தான் இந்தத் தருணத்தைத் தந்தார் என்று தாவீதைத் தூண்டியபோதும், கர்த்தருடைய வழியைவிட்டு தாவீது விலகவில்லை. “கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மீது கைவைக்க மாட்டேன்” என்று மறுத்து, சவுலை தப்பவைத்தார். அதற்காக, கர்த்தர் தாவீதைக் கைவிட்டாரா? இல்லை! ஏற்ற வேளையிலே கர்த்தர் தாவீதை உயர்த்தினார். ஆம்! “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” (சங்.16:7) என்று கர்த்தரைத் துதித்தார் தாவீது.
இன்று ஆலோசகர்கள் அநேகர் எழும்பியிருக்கிறார்கள். ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சிகளும் அதிகரித்திருக்கிறது. எல்லாம் நல்லது. ஆனால், ஆலோசனை நாடி நாம் யாரிடம் செல்லுகிறோம் என்பதைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும். “ஆலோசனைக் கர்த்தர்” ஒருவர் நமக்கிருக்கிறார். மனித ஆலோசனைகள் நம்மை சிலசமயம் கலக்கமடையச் செய்யலாம். ஆகவே, ஆலோசனைக் கர்த்தரையே நாம் ஆதரவாகக் கொண்டிருப்போம். வேதவாக்கியங்கள் முழுவதும் நமக்கு ஆலோசனை வழங்கும் வார்த்தைகளே என்பதை நம்பி தேவனிடம் சேருவோம். அவர் தகுந்த ஆலோசனை தந்து நம்மை நடத்துவார்.
ஜெபம்: தகப்பனே, துன்மார்க்கனுடைய ஆலோசனைக்கு எங்களை தூரப்படுத்தி, உம்முடைய ஆலோசனையின்படியே நீர் எங்களை நடத்த ஒப்புவிக்கிறோம். ஆமென்”.