சமாதானப் பிரபு!

தியானம்: 2026 செப்டம்பர் 20 ஞாயிறு | வேத வாசிப்பு: எபேசியர் 2:11-22

YouTube video

எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, …. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து … (எபேசியர் 2:14).

ஒருவரில் ஒருவருக்கு பகை ஏற்படும்போது, பிரிவினைச் சுவர் தானாகவே எழும்பி விடுகிறது. பிரிவினை, நமது இதய சமாதானத்தை அழித்துப்போடுகிறது. தனிப்பட்ட வாழ்வில், நாடுகளிடையே நடக்கின்ற குழப்பங்களில் பகையும், அதைத் தொடர்ந்து பிரிவினையும் ஏற்பட்டு, சமாதானமும் இழக்கப்பட்டு, பின்னர் இழந்த சமாதானத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள பல யுக்திகளை மனிதன் கையாள முயலுகிறான். என்ன தான் முயற்சிகளை எடுத்தாலும், ஆரம்ப வடுக்கள் மாறுவதில்லை; அது அவ்வப்போது பிரச்சனைகளை எழுப்பி விடத்தான் செய்கிறது.

யூதரும் புறவினத்தாரும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாகவே இருந்தனர். யூதரைப் பொறுத்த வரையில் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும், புறவினத்தார் தேவனுடைய மீட்பின் திட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் எண்ணி, அவர்களைத் தள்ளியே வைத்திருந்தனர். ஆனால் இயேசு வந்து இரு திறத்தினரின் பாவநிலையை உணர்த்தி தூரமாயிருந்த புறவினத்தாருக்கும், சமீபமாயிருந்த யூதருக்கும் தம்முடைய சுவிசேஷத்தை கிருபையாக வழங்கினார். இதனால் அவர்கள் நடுவில் எழுந்து நின்ற பெருமைச் சுவர் இடிந்து விழுந்தது. சகலரையும் தமக்குள்ளே ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்தார். சிலுவை மரணத்தினால் பகையைக் கொன்று, இருபக்கத் தாரையும் ஒரே சரீரமாக்கி தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

இப்படியிருக்க, ஆண்டவருடைய பிள்ளைகள் என்று சொல்லுகின்ற நமது வாழ்விலே, குடும்பத்திலே, சபையிலே உண்மையாகவே சமாதானத்தை அனுபவிக்கிறோமா? நாம் எல்லோருமே தேவனுடைய பார்வையிலே பாவிகள்தானே; அப்படியிருக்க ஏன் வீண் வாதங்களும் சண்டைகளும் பிரிவினைகளும்? இன்று குடும்ப உறவுகள் திடீர் திடீரென உடைந்துபோவதன் காரணம்தான் என்ன? சந்தேகங்கள், பொறாமை, கோபம், கடன், நோய் என்று பல காரணிகள் நமது சமாதானத்தைக் குழப்பிவிட வழி வகுப்பதை மறுக்கமுடியாது. ஆனால் சமாதானகாரணராகிய கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற நாம், நமக்குள் உள்ள சமாதானத்தை இழக்கவேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே சமாதானம் இல்லையெனில், பிறருக்கிடையில் சமாதானம் பண்ணுகிறவர்களாக எப்படி வாழமுடியும்? கிறிஸ்து தம்மையே சிலுவையில் கொடுத்து, தடையாய் நின்ற பிரிவினைச் சுவரைத் தகர்த்தெறிந்தார். இன்று நாம் பிரிவினைகளை ஏற்படுத்தி சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கலாமா?

“இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் செய்கிறேன்” (ஏசாயா 66:12) என்கிறார் கர்த்தர். அந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள நான் ஆயத்தமா?

ஜெபம்: கர்த்தாவே, பிரிவினைகளோடு உள்ள குடும்பங்களில், சபைகளில் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்பட்டு மெய்சமாதானத்தைத் தந்தருள ஜெபிக்கிறோம். ஆமென்.