நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்!

தியானம்: 2026 செப்டம்பர் 21 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 3:13-19

YouTube video

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் … நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி … அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).

தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை பூமிக்கு அனுப்பியதன் நோக்கம், பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்கு மாத்திரமல்ல, நமக்கு நித்திய ஜீவனைத் தந்தருளவே ஆகும்; ஆம், நித்திய நித்தியமாய் தம்மோடு தமது பிள்ளைகள் வாழவேண்டும், இழந்துபோன பரலோக சந்தோஷத்தை மீண்டும் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும், இழந்துபோன தேவசாயலை மனிதர் நாம் திரும்பவும் அடையவேண்டும் என்பதற்காகவேயாகும்.

தேவன் தாம் சிருஷ்டித்த மனிதனின் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதிய வேளையில் அவன் ஜீவாத்துமாவானான். தேவசாயலைக் கொண்ட அவன் தேவனைப்போல நித்தியஜீவனை உடையவனானான். ஜீவாத்துமாவான மனுஷன் என்றும் தம்முடன் உறவாட வேண்டுமென்றே தேவன் விரும்பினார். ஆனால் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தனக்கு விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தான்; பாவம் அவனை பற்றிக்கொண்டது. நித்தியமாய் வாழுகின்ற கிருபையை இழந்தான்; தேவனோடுள்ள உறவை இழந்தான்; உயிர் இருந்தும் தேவன் இல்லாத வாழ்வு வாழ நேரிட்டது; இதன் விளைவாக சரீர மரணமும் அவனை ஆட்கொண்டது. எனினும், அன்பு நிறைந்த தேவனாகிய கர்த்தர் தமக்குக் கீழ்ப்படியாத மனுஷனை அழித்துப்போடவில்லை; மனுஷன் இழந்துபோன நித்தியஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ள தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இப் பூமிக்கு அனுப்பினார்.

இயேசு நம்மைப்போலவே மனிதனாகி, நம்மைப்போலவே இவ்வுலகில் வாழ்ந்து, நமக்கு நேரிடக்கூடிய சோதனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை முறியடித்து, பிதாவின் அநாதி திட்டப்படி பாவமில்லாத அவர் நமது பாவங்களைச் சுமந்து பாவமாக்கப்பட்டு, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை, அதாவது நாம் மரிக்கவேண்டிய இடத்தைத் தாமே ஏற்றுக்கொண்டு, நமக்காக கொடூர சிலுவை மரணத்தைச் சகித்து, தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி, தேவகோபத்தை சாந்தி செய்து, நம்மைப் பிதாவுடன் மீண்டும் ஒப்புரவாக்கினார். இவை யாவும் நமக்குத் தெரிந்த விஷயம்தான்.

தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்ட நாம், இன்று அவரிடம் தைரியமாகக் கிட்டிச்சேரத் தக்க சிலாக்கியத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்? ஆம். “பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்” (ரோ.6:23) என்று வேதம் கூறுகிறது. இந்த இயேசுவை விசுவாசிக்கிற எவரும் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடைந்து, நித்திய நித்தியமாய் தேவனோடு வாழுவோம். இந்தக் கிருபையை நமக்கு அருளின தேவனுக்கு நாம் என்ன பதில் செய்யப்போகிறோம்?

ஜெபம்: பிதாவே, நாங்கள் இழந்துபோன தேவசாயலை மீண்டும் பெற்று வாழ பாவமில்லாத உமது குமாரனை எங்களுக்காகத் தந்தீரே. உமக்கு நன்றி ஐயா. ஆமென்.