தண்டனைக்கு எப்படித் தப்புவது?

தியானம்: 2026 செப்டம்பர் 23 புதன் | வேத வாசிப்பு: எபிரெயர் 2:1-4

YouTube video

…. இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம் (எபிரெயர் 2:4).

ஒரு காரியத்தைத் தொலைத்துவிடுவது ஒன்று; அலட்சியமான போக்குடன், கவனமற்றிருப்பது இன்னொன்று. கவனமற்றிருக்கும்போது, அதைத் தொலைத்துவிடுவது சாத்தியமாகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அல்லது ஒரு பொருளைத் தவற விட்டுவிட்டால் என்ன செய்வோம்? எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போனோம் என்று யோசித்து யோசித்து, விட்டுவந்த இடங்களுக்கே திரும்பிப்போய் தேடமாட்டோமா? கண்டுபிடித்தால் எவ்வளவாய் மகிழுவோம்!

இயேசுவின் சிறுவயதில், எருசலேமில் பண்டிகைக்கு போய்விட்டு, திரும்பி வருகிற போது, இயேசு எருசலேமிலேயே இருந்துவிட்டது மரியாளுக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவருக்கு இப்போது பன்னிரண்டு வயது. ஆகவே அவர் மற்றவர்களுடன் வருவார் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. அவர்கள் ஒருநாள் பிரயாணம் பண்ணி திரும்பி வருகிறார்கள். எல்லா இடங்களிலும் தேடுகிறார்கள். உறவினரிடத்திலும், அறிமுகமானவர்களிடத்திலும் தேடியும் இயேசுவைக் காணவில்லை. அவர்கள் இருதயம் எவ்வளவு பதைபதைத்திருக்கும். அதிலும் இயேசுவின் பிறப்பின் சகலமும் அறிந்திருந்த மரியாளும் யோசேப்பும், தேவனாகிய கர்த்தர் தம்மிடம் கிருபையாய் கொடுத்த பொறுப்பைத் தொலைத்து விட்டோமோ என்று நிச்சயம் வேதனைப்பட்டிருப்பார்கள்! ஆனால் அவர்கள் செய்த ஒரு நல்ல காரியம், அவரை எந்த இடத்தில் விட்டார்களோ அந்த இடத்திற்கே திரும்பிப் போய், மூன்று நாட்களுக்குப் பின்னர் இயேசு தேவாலயத்திலே போதகர் நடுவில் உட்கார்ந்திருந்து, அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.

இன்று நம்மில் பலர் விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தைத் தொலைத்துவிட்டதுகூட தெரியாமல் வாழ்கிறார்கள். அது சாதாரண உலக செல்வமோ பணமோ அல்ல. முதலாவது, இது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது, இது அவரிடத்தில் கேட்டவர்களாலே உறுதியாக்கப்பட்டது. மூன்றாவது இது அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவித பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் தேவன் தாமே சாட்சி கொடுத்தது. இவ்வளவு பெரிதான வேறே காரியம் எது? இதுதான் கிறிஸ்து இயேசுவின் ஏகபலியினாலே நமக்கு அருளப்பட்ட மீட்பு, இரட்சிப்பு. இதைக் குறித்துக் கவலையற்றிருப்பது எப்படி? நாம் பெற்றுவிட்டோமே என்று அலட்சியமாயிருப்பதும் எப்படி? இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம் என்று கூறுகின்ற நமது வாழ்விலே, அதற்கான சாட்சி உண்டா? இல்லையானால் அதைத் தொலைத்துவிட்டோமா? தொலைத்துப்போட்ட இடத்திற்கு திரும்பிச் சென்று, கர்த்தரிடத்தில் அதைத் தேடி, அதை மீண்டும் பெற்றுக்கொள்வோமாக.

ஜெபம்: அன்பின் தகப்பனே, இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அசட்டை பண்ணி தொலைத்துவிடாதபடி, அதைக் காத்துக்கொள்வதில் ஜாக்கிரதையோடிருக்க கிருபை தாரும். ஆமென்.