பிதாவுக்கடுத்தவைகளில்!

தியானம்: 2026 செப்டம்பர் 24 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 27:1-5

YouTube video

…. என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார் (லூக்.2:49).

யூத கலாச்சாரத்தில் ஒரு குழந்தை பிறந்த பின்னர், பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரைக்கும் பிள்ளையின் பொறுப்பு முக்கியமாக அம்மாவுடையது; பின்பு பன்னிரண்டு வயதுவரைக்கும் பிள்ளை கர்த்தருக்கடுத்த காரியங்களிலும் ஒழுக்கநெறிகளிலும் வளருவதற்குரிய பிரயத்தனங்களை எடுக்கவேண்டியது தகப்பனின் பொறுப்பு. பன்னிரு வயதுக்குப் பின்னர் அவன் தன் வாழ்வை உணர்ந்து நடக்க ஆரம்பிப்பான். இயேசு பன்னிரண்டு வயதினராய் இருந்தபோது, நடந்ததை நேற்று சிந்தித்தோம். எருசலேமுக்குத் திரும்பிப்போன பெற்றோர், இயேசு தேவாலயத்திலே போதகர் நடுவில் உட்கார்ந்திருந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பவராக அவரைக் கண்டனர்.

அவரைக் கண்டதும், மரியாள், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்” என்று கேட்க, இயேசு சொன்ன பதிலைத்தான் மேலே பார்க்கிறோம். சிறுவயதிலிருந்தே இயேசு தன் சிந்தனைகளிலும், கிரியைகளிலும், பிதா தம்மை இவ்வுலகத்திற்கு அனுப்பிய நோக்கத்தை நிறைவு செய்யவேண்டுமென்ற ஒரே சிந்தனையுடனேயே வளர்ந்தார்! “நான், என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கவேண்டும்” இதுதான் இயேசுவின் உயிர்த்துடிப்பாக இருந்தது.

மேலும், பன்னிரு வயதிலேயே இயேசு, தாம் எருசலேமின் தேவாலயத்தில் தங்கி இருப்பதையே நாடினார். ஆம், கர்த்தரின் சமுகமே அவருடைய அந்தச் சிறு வயதிலும் அவரது பேராவலாக இருந்ததை நாம் சிந்திக்கவேண்டும். மாத்திரமல்ல, அடுத்ததாக, தன் வயதுக்கேற்ற சிறுவர்களுடன் சேர்ந்து தேவாலயத்தில் விளையாடுவதில் இயேசு நேரத்தைச் செலவிடவில்லை. பரியாசக்காரர் கூட்டத்தில் உட்கார்ந்து அவர்களுடன் அரட்டை அடிக்கவில்லை. மாறாக, போதகர்கள் நடுவில் உட்கார்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்பதும், அவர்களை வினாவுவதிலுமே நேரத்தைக் கழித்தார். “போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்” (லூக்கா 2:46).

அன்று தாவீது, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங்.27:4) என்றும் பாடினார். இன்று நமது மனவிருப்பம் எது? நமது நாட்டம் எதில் இருக்கிறது? நமது சம்பாஷணை எப்படிப்பட்டது? நமக்கு மாதிரியாயிருக்கிறவர் இயேசு ஒருவரே. அவர் நடந்தபடியே நாமும் நடக்க நம்மை ஒப்புவிப்போமா!

ஜெபம்: தேவனே, என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும், என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. ஆமென்.