பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்!
தியானம்: 2026 செப்டம்பர் 25 வெள்ளி | வேத வாசிப்பு: யோசுவா 3:1-8

… உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான் (யோசுவா 3:5).
அன்று இஸ்ரவேலைப் பொறுத்தளவில் பரிசுத்தம் பண்ணுவது என்பது சில செயல் வழிமுறைகளைக் கொண்டது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதத்திலே சீனாய் வனாந்தரத்திலே, கர்த்தர் மோசேயிடம், ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும்படி கூறுகிறார் (யாத்.19:10-15). அவர்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தமது மனைவிகளையும் சேராதிருக்கவேண்டும். இது அன்று அவர்களுக்கு விளங்கக்கூடிய சரீர ரீதியான பரிசுத்தம். அப்படியே மோசே செய்தபோது, மூன்றாம் நாளிலே தேவ பிரசன்னம் மலையிலே இறங்கியது. ஆனால் அவர்கள் பண்ணின பரிசுத்தம் தேவ பிரசன்னத்தின் முன் நிற்பதற்கு முடியாதளவுக்கு அவர்களைப் பின்னிட்டுப்போக வைத்தது. இங்கே, யோர்தானில் கர்த்தர் ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த இருந்தார். யோர்தானைக் கடக்கும் முன்னதாக மக்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார்.
ஆனால் இன்று நாம் இந்த வெளியரங்கமானதும் நிலையற்றதுமான பரிசுத்தமாகுதலை அல்ல; நித்திய பரிசுத்தமாக்குதலுக்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். “பரிசுத்தம் இல்லாமல் தேவனை எவரும் தரிசிக்கமுடியாது” என்பது வேதசத்தியம்.
ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். “பரிசுத்தம்” என்பது தேவனுக்கடுத்த வார்த்தையாகும். அவர் ஒருவரே பரிசுத்தர். ஆனால், “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1பேதுரு 1:15) என்று பேதுரு மூலமாக நமக்குக் கர்த்தர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் “பரிசுத்தம்” என்பதற்கு நமக்கான அர்த்தம் என்னவெனில், “வேறுபிரிக்கப்பட்ட வாழ்வு” என்பதாகும். அதாவது இந்த உலகத்துக்கு ஒத்த வாழ்வு வாழாமல், கர்த்தருடைய வழியில் நின்று, அவருக்குள் அவருக்காக மாத்திரம் வாழுகின்ற வாழ்வாகும்.
பாவிகளாகிய நாம் நமது சொந்த முயற்சியினால், நமது சொந்தப் பெலத்தினால் இதனைச் செய்யவே முடியாது. நமது பாவங்கள் கழுவப்பட வேண்டும். அது இயேசு சிந்திய இரத்தத்தினால் மாத்திரமே முடியும். “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” (எபி.10:10). ஆம், இயேசு சிந்திய இரத்தமேயல்லாமல் நம்மைப் பரிசுத்தமாக்க எந்த முயற்சியினாலும் முடியாது. பரிசுத்த வாழ்வு நம்மைத் தேவனோடு இணைக்கும் வாழ்வு; அது உலகத்தின் ஆசை இச்சைகளிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பிரிக்கிறது. “பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க நாடுங்கள்” (எபி.12:14).
ஜெபம்: எங்களை பரிசுத்தப்படுத்துகிற தேவனே, உலகுக்கொத்த வாழ்வு வாழாமல் வேறுபிரிக்கப்பட்டவர்களாகவும் கர்த்தருக்குப் பிரியமானதையே எப்போதும் செய்கிறவர்களாக வாழ எங்களை உமதாவியால் நிரப்பும். ஆமென்.