புறப்பட்டுப் போ!
தியானம்: 2026 அக்டோபர் 1 வியாழன் | வேத வாசிப்பு: மத்தேயு 28:16-20

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் … (மத்தேயு 28:19).
கடந்த நாட்களெல்லாம் நம்மை கைவிடாமல் நடத்திவந்த சர்வவல்லமையுமுள்ள தேவனை ஸ்தோத்திரிப்போம். உலகத்தின் முடிவுபரியந்தம் நம்மோடுகூட இருப்பேன் என்று வாக்குப் பண்ணின தேவன் நம்மோடிருந்து நம்மை வழுவாமல் வழிநடத்துவார். புதிய மாதத்தையும் ஆசீர்வதிப்பார்.
ஸ்கார்ட்லாந்தில் பிறந்த ஏமி கார்மைக்கேல் அம்மையார் 1892 ஜனவரி 13ஆம் நாள் ”புறப்பட்டுப் போ” என்ற ஆண்டவரின் ஆணையைத் தெளிவாகக் கேட்டார். அந்தச் சூழ்நிலையில் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் சில வரிகளை திலகவதி பால் அவர்கள் எழுதிய “ஏமி கார்மைக்கேல் அம்மையார்” என்ற புத்தகத்தில், “என் செல்ல அம்மா, ஒரு நாளைக்கு ஐம்பதினாயிரம் மக்கள் வீதம் நித்தியஒளியை காணாமல் இருளில் மடிகின்றனர். நாமோ பேரொளியில் திளைத்திருக்கின்றோம். இருளில் மடியும் மக்களுக்கு இயேசுவின் அன்பை எடுத்துச் செல்லவேண்டும் என்ற ஆவல் நீண்டநாட்களாகவே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எப்பக்கம் திரும்பினாலும் எல்லாமே என்னிடம் “போ! போ!” என்று சொல்லுவதுபோல் இருக்கின்றது. தீனக்குரல் ஒன்று “வா! வா! வந்து எங்களுக்கு உதவி செய்” என்று என்னை அழைக்கிறது. எத்தனையோ காட்சிகளை என் மனக்கண்ணால் காணமுடிகின்றது. இயேசுவின் அன்பைத் தெரிந்துகொள்ள ஒரு சிறிய வாய்ப்புக்கூட இல்லாத கோடான கோடி மக்களின் பரிதாப நிலையை தெளிவாகக் காண்கிறேன். குடும்ப உறவு என்னைப் பற்றிக்கொண்டு இப்பக்கமாக இழுக்கின்றது. நான் இல்லாமல் என்ன செய்வீர்கள் அம்மா? என் பிரிவினால் அப்பாவிற்கு ஏற்படக்கூடிய தனிமை, என் உடல் நிலை இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் குறித்துவைத்து, நான் நற்செய்திப்பணிக்குப் போக வேண்டியதில்லை என்று என்னை நானே சரிப்படுத்திக்கொண்டேன், எனினும், மேற்கூறிய இந்தக் காரணங்கள் இயேசுவை அறியாத மக்களிடமிருந்து என்னைத் தடுத்து நிறுத்தப் போதுமானவைதானா? “புறப்பட்டுப் போ!” ஆம், ஆண்டவர் பேசினார். அதில் ஐயமில்லை. அவர் “போ” என்று சொன்னபிறகு நான் இங்கே இருக்க முடியாது. “போ” என்று சொன்ன ஆண்டவரிடம் “ஆகட்டும்” என்று சொல்லிவிட்டேன்.”
இயேசு இறுதியாக சீஷரிடம் சொன்ன கட்டளை, “நீங்கள் புறப்பட்டுப் போய்” என்பதுதான். அன்று சீஷர்கள் யூதர்கள் மத்தியில் மாத்திரம் பணிசெய்திருந்தால் இன்று நாம் மீட்பைப் பெற்றிருப்போமா? அவர்கள் சிதறடிக்கப்பட்டபோது, சிதறிப்போன இடத்திலெல்லாம் சுவிசேஷத்தை அறிவித்ததால் அநேக புறஇனத்தாரும் மீட்பைப் பெற்றுக்கொள்ள ஏதுவானது. ‘யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான்’ என்று ஏசாயா காலத்தில் அழைப்புவிடுத்த கர்த்தர், இன்றும் தமது பணிக்கென அழைப்பு விடுக்கிறார். ஏமி கார்மைக்கேல் தேவ அழைப்புக்குக் கீழ்ப்படிந்தார். இன்று நம் ஒவ்வொருவருக்கும், அவரவருக்கு ஏற்றபடியான வித்தியாசமான அழைப்பைக் கர்த்தர் விடுத்திருக்கிறார். நாம் அதை அறிந்து உணர்ந்து, ஏற்றுக்கொள்ளவேண்டும். தடைகள் வந்தாலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு, ‘புறப்பட்டுப் போ’ என்ற தேவ சத்தத்திற்குக் கீழ்ப்படிய நாம் ஆயத்தமா?
ஜெபம்: கர்த்தாவே, தேவஅழைப்புக்குக் கீழ்ப்படியும் இருதயத்தை எங்களுக்குத்தாரும். ஆமென்.