சீஷராக்குங்கள்
தியானம்: 2026 அக்டோபர் 4 ஞாயிறு | வேத வாசிப்பு: மாற்கு 3:13-19

… நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி … நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் (மத்.28:19,20).
இந்தப் பகுதியில் “புறப்பட்டுப்போய்”, “சீஷராக்கி”, “ஞானஸ்நானம் கொடுத்து”, “உபதேசம் பண்ணுங்கள்” ஆகிய நான்கு வினைச்சொற்களில், ‘சீஷராக்கி’ என்ற சொல் கிரேக்க மொழியில் தனித்து வருகின்றது. ‘சீஷராக்கி’ என்பதே முதன்மையான வினைச்சொல். மற்ற மூன்றும் முதன்மையான வினைச்சொல்லுக்குத் துணையாக வரும் வினை எச்சங்கள். எனவே, இங்கு கொடுக்கப்படும் பிரதான கட்டளை “சீஷராக்குங்கள்” என்பதே.
புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தை அறிவிப்பதோடு நமது பணி முடிவடைவதில்லை. சுவிசேஷம் கேட்டவர்களைச் சீஷராக்கவேண்டிய பெரிய பணியும் நம்முடையதே. சீஷன் என்றால் “மாணவன்” அல்லது “கற்றுக்கொள்பவன்” என்பது அர்த்தம். நாம் கற்றதை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, சீஷர்களாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். சீஷர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இயேசு தம்முடைய சீஷரோடு நேரம் செலவழித்து அவர்களை தமது சொந்த வாழ்க்கை முறையின் மூலம், வார்த்தைகளின் மூலம் கற்பித்து வளர்த்தெடுத்தார். இப்போது அவர்கள் மற்றவர்களைச் சீஷராக்கப் பணிக்கப்படுகின்றனர். இயேசுவைப் பின்பற்றி அவருக்குக் கீழ்ப்படிபவனே மெய்யான சீஷன்.
நாம் மற்றவர்களை கிறிஸ்துவுக்குச் சீஷராக்கி, அவர்கள் ஏனையோரை கிறிஸ்துவுக்குச் சீஷராக்கப் பயிற்றுவிக்கவேண்டும். இயேசு பன்னிருவரைப் பயிற்றுவித்தார். அதில் ஒருவன் தவறியபோதிலும், இன்னொருவன் சேர்க்கப்பட்டு, அநேகருக்குச் சுவிசேஷத்தை அறிவித்து, அநேக சீஷர்களை உருவாக்கினார்கள். அவர்கள் இன்னும் பலரை சீஷராக்கினார்கள். ஒருவர் கூறியதுபோல, “தேவன் பக்தகோடிகளையல்ல, சீஷர்களையே எதிர்பார்க்கின்றார்” என்பது உண்மை. நாமும் சுவிசேஷத்தை அறியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, வேத வசனத்தின் மூலமும், நமது வாழ்க்கையின் மூலமும் கற்பித்து, அவர்களைக் கிறிஸ்துவுக்கு சீஷராக்குவோமாக. அவர்களைக் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்ற மக்களாக்குவோமாக.
இது இலகுவான பணி அல்ல. முதலில் நாம் உத்தம சீஷர்களா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். சீஷத்துவத்தின் கிரயம்பற்றி ஆரம்பத்திலேயே கற்பித்தாகவேண்டும். தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டியவன் சீஷன். இதில் “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு” என்ற சொற்களின் ஆழத்தை நாமும் புரிந்து, மற்றவருக்கும் புரியவைக்காவிட்டால் எவனும் சீஷத்துவ வாழ்வில் நிலைத்திருப்பது கடினம். நாம் எப்படி?
ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் உன்னத சீஷத்துவவாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களையும் அவ்வழியில் நடத்துகிறவர்களாக காணப்பட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.