எல்லா ஜாதியினரும்

தியானம்: 2026 அக்டோபர் 5 திங்கள் | வேத வாசிப்பு: வெளி.5:6-14

YouTube video

தேவரீர் …. அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு… (வெளி 5:9).

சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார் (மத்.28:18-20). இது ஆண்டவர் நமக்களித்த பெரிய கட்டளை. நாமோ இதை விட்டுவிட்டு மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறோம் அல்லவா! ஜாதிகள் என்பது இனங்களை, மக்கள் குழுக்களைக் குறிக்கின்றது. தேவனுக்கெதிராக மக்கள் புரட்சிசெய்து பாபேல் கோபுரத்தைக் கட்டியபோது, தேவன், மக்களது பாஷையைத் தாறுமாறாக்கினார். அதனால் உலகில் பல பாஷைகள் உருவாகின. அதன் விளைவாக இனங்களும் பல உருவாயின. இன்று உலகில் எல்லாப் பாகங்களிலும் பல இன மக்கள் வாழ்கின்றார்கள். இந்த ஒவ்வொரு இனத்திற்கும் அவரவர்களுக்கு விளங்கும் விதத்தில் சுவிசேஷம் அறிவிக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது. ஒவ்வொரு இனத்திலிருந்தும் மக்கள் மீட்கப்படுவது தேவனுடைய சித்தமாக இருக்கின்றது.

இந்தியாவிலும் பிறநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுக்கள் இன்னும் சுவிசேஷத்தை முழுமையாக கேட்காத நிலையில் உள்ளனர். மத்திய இந்தியா, வடகிழக்கு இந்தியாவின் உட்பகுதிகள் மற்றும் மலைபிரதேசங்களில் பெரும்பாலோர் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளனர். சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பும் விடுதலையும் கொண்டுசெல்லப்பட வேண்டும். இப்படி இனங்களின் அடிப்படையிலுள்ள இந்த ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் அர்த்தமுள்ள விதத்தில் அறிவிக்கப்படவேண்டும். ஒவ்வொரு தேசத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் வாழுகின்ற இனங்கள், மக்கள் குழுக்கள் மத்தியிலும், நம்மைச் சுற்றிலும் வாழுகின்ற மக்கள் மத்தியிலும், சுவிசேஷத்தை அறிவித்து அவர்களையும் சீஷராக்குவதும் மிஷனரி ஊழியமே. எவரையும் நாம் மறந்துவிடவோ தவிர்த்துவிடவோ முடியாது.

கிறிஸ்துவே எவ்வித வித்தியாசமுமின்றி சகல ஜாதிகளிலுமிருந்தும் ஜனங்களிலிருந்தும் மக்களை தமது இரத்தத்தாலே மீட்டு, தேவனுக்கு முன்பாக நிறுத்த சித்தம்கொள்வாரென்றால், அவரால் மீட்கப்பட்ட நாம் பிற மக்களை மறந்துவிடலாமா? உலகத்திலுள்ள சகலருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். “ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோக மெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்” (மத்.24:14). இன்றைய தினம் நம் மத்தியிலுள்ள மக்கள் குழுக்களைக் குறித்துப் பாரப்பட்டு ஜெபிப்போமா? அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்போமா? அல்லது அறிவிக்க முன்வருகிறவர்களை ஜெபத்தாலும் பணத்தாலும் தாங்குவதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா?

ஜெபம்: நல்ல ஆண்டவரே, சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்பணியில் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதற்கு எங்களை முற்றிலுமாய் ஒப்புவிக்கிறோம். ஆமென்.