உங்களை அனுப்புகிறேன்

தியானம்: 2026 அக்டோபர் 6 செவ்வாய் | வேத வாசிப்பு: அப். 1:8; யோவான் 20: 21-23

YouTube video

பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவான் 20:21).

மிஷன் பணியானது தேவனது சுபாவத்திலேயே இருக்கின்றது. அது அவரது இருதயத்திலிருந்து வருகிறது. ஆதி.12:1-3ல் தேவன் முழு உலகையும் ஆசீர்வதிக்கச் சித்தம் கொண்டதைப் பார்க்கின்றோம். இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்ட தேவன், “நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள்” என்றார் (யாத்.19:6). இஸ்ரவேலருக்கு ஆசாரியர்கள் இருந்ததுபோல, இஸ்ரவேலர் மற்ற ஜாதிகளுக்கு ஆசாரியர்களாக ஏற்படுத்தப்பட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஜாதியாக வாழ்வதன் மூலமும், தேவனுடைய மகத்துவங்களை அறிவிப்பதன் மூலமும் அந்நிய ஜாதிகளுக்கு மெய்யான தேவனை வெளிப்படுத்தும் வெளிச்சமாக ஜீவிக்க அழைக்கப்பட்டார்கள் (ஏசா.49:3). உலகுக்குத் தம்மை வெளிப்படுத்துவதற்கு தேவன் இஸ்ரவேலரைத் தெரிந்தெடுத்தார். தமது குமாரன் மூலமாக உலகை மீட்கச் சித்தம் கொண்டார். எனவே நாம் வணங்கும் பிதாவாகிய தேவன் ஒரு மிஷனரி தேவன்.

இயேசு கிறிஸ்துவும், மக்களை மீட்கும்படிக்கு பிதாவினால் இவ்வுலக மக்களுக்காக அனுப்பப்பட்டார். அவரும் மிஷனரி சிந்தை தரித்தவர். டேவிட் லிவிங்ஸ்டன் கூறினார்: “தேவனுக்கு ஒரேயொரு குமாரன். அவர் ஒரு மிஷனரி” என்றார். அப்.1:8 இல் பரிசுத்த ஆவியானவர் ஒரு மிஷனரி ஆவியாகச் செயற்படுவதைப் பார்க்கின்றோம். அவர் சீஷர்களிடத்தில் வரும்போது, அவர்கள் பெலனடைந்து எருசலேம் தொடங்கி பூமியின் கடைசிவரைக்கும் சாட்சிகளாக இருப்பார்கள் என்றும், இருந்தார்கள் என்றும் காண்கின்றோம். ஆம், பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும், பரிசுத்த ஆவியாகிய தேவனுமாகிய திரித்துவ தேவன் ஒரு மிஷனரி தேவன். அவர் கட்டளையிட்டிருப்பதால் மாத்திரமல்ல, அவருடைய சுபாவத்திலேயே மிஷன் இருப்பதால் நாம் மிஷனரி ஊழியத்தில் பங்கெடுக்கவேண்டும். மிஷன் தேவனுடைய சுபாவத்திலிருந்து தோன்றியது. அது அவருடைய இதயத்திலிருந்து வருகிறது.

பிதா, குமாரனை அனுப்பினார். குமாரன் இன்று தமது பணியைச் செய்ய அனுப்புவதற்காக நம்மை அழைக்கிறார். தேவன் சிலரை மிஷனரிகளாகப் போகும்படியும், சிலரை பணிக்கு அனுப்பும்படிக்கு உதவவும் அழைக்கிறார். ஒருவேளை கணக்காளராகவோ, வைத்தியராகவோ, கூலியாளாகவோ நீங்கள் இருக்கலாம். உங்களுக்கும் தேவனுடைய மிஷனில் பங்கு உண்டு. மொத்தத்தில் ஒவ்வொருவரும் ஏதொவொரு விதத்தில் மிஷனரிகளாகவே அழைக்கப் பட்டுள்ளோம். மிஷனரிகளைத் தாங்குவதும், அவர்களை ஊக்கமூட்டுவதும் நமது பொறுப்பாகும். இதுவரையிலும் நமது பங்கைச் சரிவர நிறைவேற்றியிருக்கிறீர்களா! இல்லையெனில் மனந்திரும்புவோமாக!

ஜெபம்: கர்த்தாவே, மிஷன் பணிகளைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் எங்கள் உள்ளத்தில் வைக்கும் ஏவுதலை உணர்ந்துகொள்ளும் உணர்வைத் தாரும். ஆமென்.