கேட்டிராதவர்களுக்கு அறிவி
தியானம்: 2026 அக்டோபர் 11 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 15:9-22

கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன் (ரோமர் 15:21).
இன்று அநேக சபைகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் மட்டுமே ஊழியம் செய்து கொண்டிருக்கின்றனர். சுவிசேஷத்தைப் பலமுறை கேட்டு அலுத்துப் போனவர்களுக்கே திரும்ப திரும்ப சுவிசேஷத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு சபையில் உள்ளவனிடம் அச்சபையைப்பற்றி குறையாகச் சொல்லி, தமது சபைக்கு அழைத்து, அவனுக்குத் திரும்பவும் ஞானஸ்நானமும் கொடுக்கின்றார்கள். மக்களும் சபைக்குச் சபை தாவிக் கொண்டிருக்கின்றார்கள். சுவிசேஷமோ இன்னும் அநேக இடங்களில் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.
பவுலடியார் எந்தவொரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருந்தார் என்று நாம் வாசிக்க முடியாது. சுவிசேஷம் சொல்லப்படாத இடங்களைத் தேடித்தேடிச் சென்றார். இதனால் பல இன்னல்களை அவர் சந்திக்க நேரிட்டது. ஆனால், அவரது மிஷனரிப் பணிகளால் சுவிசேஷத்தை அறிந்து ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்.
புதிய இடங்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கப்போவது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் ஊழியம் ஒருவித பாதுகாப்பையும் சௌகரியத்தையும் ஐக்கியத்தையும் கொடுப்பதால் நாம் அதனைவிட்டுப் போக விருப்பமற்று இருக்கின்றோம். ஆனால், இவை நம்மை சோர்வுறப்பண்ண இடங்கொடுக்கலாகாது. நாம் புதிய இடங்களுக்குத் தனியே போய் ஊழியம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. இயேசுவும் சீஷர்களை இரண்டு இரண்டு பேராகவே அனுப்பினார். தனியே போனால் சோர்வடைந்துவிடவும், விழுந்துவிடவும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.
சில சபைகள் ஆரம்பிக்கப்பட்டு பத்து இருபது வருடங்களாகியும், அவர்கள் புதிய இடங்களில் சபைகளை ஆரம்பிக்காமல் இருப்பது வேதனைக்குரியது. சில சபைகள் பல புதிய இடங்களுக்குப்போய் சபைகளை ஸ்தாபித்துக் கொண்டிருக்க, மற்ற அநேக சபைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. சபை என்பது ஒரு கட்டிடம் அல்ல; அது அழைக்கப்பட்ட மக்களின் கூட்டத்தைக் குறிக்கின்றது. எனவே, சபை என்று கூறும்போது, அது அந்தச் சபையின் விசுவாசிகளையே குறிக்கும். எனவே, புதிய இடங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்போமா! புதிய இடங்களில் ஊழியங்களை ஆரம்பிக்க தேவ வழிநடத்துதலை நாடுவோமா? தேவ நற்செய்தி அறிவிக்கப்பட்டிராத இடங்களைக் கண்டுபிடித்து தேடிச்சென்று, அந்த மக்களுக்குச் சுவிசேஷத்தை எடுத்துரைக்க நாம் ஆயத்தமா? முதலில் சுவிசேஷபாரம் நமக்குள் உண்டா? அதன்பின்னர், ஆண்டவரை அறியாதவர் மத்தியில் அவருடைய அன்பை எடுத்துரைக்க நம்மை அர்ப்பணிப்போமா?
ஜெபம்: அன்பின் தேவனே, சுவிசேஷத்தைக் கேட்டிராத ஏராளமான இனமக்கள் மத்தியில் அருட்பணியாற்ற சுவிசேஷபாரத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.