டெய்லரும் அருட்பணியும்
தியானம்: 2026 அக்டோபர் 22 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 24:44-48

அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு … (அப். 16:10).
சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் என்பவர் நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்தபோதே, “நான் பெரிய மனிதனாகும்போது மிஷனரியாக சீனாவுக்குப் போவேன்” என்று அடிக்கடி கூறுவாராம். அவருடைய 17 வயதில் ஒரு துண்டுப்பிரதியை வாசித்து அதன்மூலமாக இரட்சிக்கப்பட்டார். ஒருநாள், “எனக்காக சீனாவுக்குப் போ” என்ற கட்டளையைப் பெற்றார். ஒரு குரல் பேசியதைப்போலவே அது இருந்தது. அவர் அதற்குத் தன்னை ஆயத்தம் பண்ணத் தொடங்கினார். அவர் சீனா சம்பந்தமான புத்தகங்களை வாசித்ததுடன் தனது பணிக்கு மருத்துவம் பெரிதும் பங்களிக்குமென்று எண்ணி, ஒரு வைத்தியரின் கீழ் வைத்தியம் கற்றார். அக்காலத்தில் தனது உணவுக்குக்கூட தேவனை நம்புவதற்குக் கற்றுக்கொண்டார். தனது ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொடுத்துவிடுமளவுக்கு எளிய வாழ்க்கை நடத்தினார். சீனாவில் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தன்னை ஆயத்தப்படுத்தினார்.
1853ல் சீனாவுக்குப் போய் சுமார் ஏழு வருடங்கள் இருந்தவர், சுகவீனம் காரணமாக வீட்டுக்குத் திரும்பினார். வைத்தியத் துறையில் தன்னைச் சிறப்பாக்கிக்கொண்டதுடன், சீனருடைய வாழ்க்கை முறையுடன், அவர்களது உடையையும் அணியத் தொடங்கினார். 1858ல் மரியா டைய்யர் என்பவரை மணம் முடித்து, ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆனார். மூன்று குழந்தைகள் மரித்தனர். 1870ல் மனைவியும் மரித்துவிட்டார். சில முரண்பாடுகள் காரணமாக சீன சுவிசேஷசங்கத்திலிருந்து விலகிய ஹட்சன் டெய்லர், சீனாவுக்கு மிஷனரிகள் எழும்பவேண்டுமெனப் பாரப்பட்டார். ஒருநாள் பிரைட்டன் என்ற இடத்தில் நண்பரோடு தங்கியிருக்கையில், தனது வேதாகமத்தை எடுத்து, பிரிட்டனில் 24 திறமைமிக்க ஊழியர் எழும்பவேண்டுமென ஜெபித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்பு ஒரு வங்கியில் 10 மார்க் பணத்தையிட்டு, “சீன உள்நாட்டு மிஷன்” என்ற பெயரில் கணக்கொன்றை ஆரம்பித்தார். 18 மிஷனரிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டு சீனாவில் சங்காய்க்குப் போய் ஊழியம் செய்தார். 1866ல் இரண்டாக இருந்த மத்திய ஸ்தானம், 1872ல் 13ஆகவும், 1884ல் 20 அதிகமாகவும், 80-90 இடைப்பட்ட மிஷனரிகளையும், சுமார் 100 உதவியாளர்களையும் கொண்டதாக வளர்ந்தது. 1890ல் 1000 ஊழியர்களுக்காக ஜெபித்த போது, 1153 பேர் முன்வந்தனர். பெண் ஊழியர்களும் ஊழியத்தில் பெரிய சேவையாற்றினர்.
பெலவீனப்பட்ட ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு மிகப்பெரிய மிஷனரி சங்கத்தை உருவாக்க கர்த்தரால் முடியுமானால், உங்களைக்கொண்டு எத்தனை பெரிய காரியத்தைச் செய்ய முடியும்! இன்று நம்மைக் கர்த்தருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுக்க நம்மால் முடியுமா?
ஜெபம்: எங்கள் தேவனே, பெலவீனன் என்று நாங்கள் சுவிசேஷப்பணியில் அமைதியாய் இருந்திடாதபடி இயன்ற ஊழியத்தை உற்சாகமாய் செய்ய எங்களுக்குதவும். ஆமென்.