அருட்பணியும் தேவசந்திப்பும்
தியானம்: 2026 அக்டோபர் 23 வெள்ளி | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:10-20

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19).
சீன உள்நாட்டு மிஷனரி சங்கத்தில் ஊழியர்கள் அதிகரிக்க, அதிகரிக்க, பணத் தேவையும் அதிகரித்தது. தேவஊழியத்துக்குத் தேவனுடைய சந்திப்புகள் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை. டெய்லர் தன் தேவைகளுக்காக தேவனை மாத்திரமே நம்பியிருந்தார். அவரை உற்சாகப்படுத்திய இரண்டு வேதாகம சொற்கள், “எபனேசர்”, “யெகோவாயீரே” என்பனவாகும்.
ஹட்சன் டெய்லர் வெளிநாடுகளுக்குச் சென்று, சீனாவில் நடக்கும் ஊழியங்களைப் பற்றிக் கூற, அநேகர் பண உதவி செய்ததுடன், ஆண்களும் பெண்களும் தங்களை ஊழியத்துக்கு ஒப்புக்கொடுக்கவும் செய்தனர். பல எதிர்ப்புகள் மத்தியில் ஊழியம் வளர்ந்தது. 1900 ஆண்டு பொக்சர் புரட்சியின் போது 58 மிஷனரிகளும், 21 பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். இந்தக் காரியமானது, அவ்வேளையில் லண்டனில் இருந்த ஹட்சன் டெய்லரை பெரிதும் கவலைக்குள்ளாக்கியது. சிறிது காலத்தின் பின் சீனாவுக்குச் சென்ற ஹட்சன் டெய்லர் சுகவீனம் காரணமாக ஒரு வருடத்தின்பின் மரித்துவிட்டார்.
ஹட்சன் டெய்லர் முதன்முறையாக மிஷனரியாகப்போக எண்ணியபோது, வயதான ஒருவர் அவரை எச்சரித்து, “உன்னைத் தாங்க ஒரு ஸ்தாபனமும் இல்லாத நிலையில் சீனா செல்லுவதால் பெரிய ஒரு தவறை நீ செய்கிறாய். இந்த மிஷன் ஒரு ஏழு வருடங்கள்கூட நிலைக்காது” என்றார். ஆனால், அவரது கணிப்பு தவறாக இருந்தது. சீன உள்நாட்டு மிஷன் ஆற்றிய சேவை அளப்பெரியது. அதுவே சபை சார்பற்ற முதல் மிஷனரி சங்கம். அது இங்கிலாந்திலிருந்து அல்ல, சீனாவிலிருந்தே இயங்கிய சங்கம். அது விசுவாசத்தில் இயங்கிய சங்கம். எவ்வளவுப் பெரிய அர்ப்பணம் இது!
நாம் தேவனை நம்பி, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவ ஊழியத்தில் இறங்குகையில், தேவன் நம்மோடு இருப்பதுடன், நமது எல்லாத் தேவைகளையும் சந்திக்கின்றார். “தேவனுடைய வழியில் செய்யப்படும் தேவ ஊழியத்துக்கு தேவனுடைய சந்திப்புகள் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை.” இந்த அனுபவம் நமக்குண்டா? ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் காணப்பட்ட விசுவாசமும் அர்ப்பணிப்பும் நமது வாழ்க்கையில் உண்டா? நமது அன்றாடத் தேவைகள், ஊழியத் தேவைகள் அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி அமைந்திருக்குமானால் நாம் ஒருபோதும் கலங்கத்தேவையில்லை. ஏனெனில், எல்லாவற்றையும் அவரே சந்தித்து, நமது குறைவுகளைத் தமக்குள் அவரே நிறைவாக்குவார். அந்த விசுவாசத்துடன் நம்முடைய ஓட்டத்தை ஓடுவோமாக.
ஜெபம்: “பரமதகப்பனே, தேவஅழைப்பு பெற்று ஆரம்பிக்கப்பட்ட ஊழியங்களில் உபத்திரவங்கள், இழப்புகள் வந்தாலும் தாழ்ச்சியடையாதவாறு குறைவுகளை உமது ஐசுவரியத்தின் படியே மகிமையிலே நிறைவாக்குகிற உமது நடத்துலுக்காக ஸ்தோத்திரம். ஆமென்.”