ஜெபமும் அருட்பணியும்
தியானம்: 2026 அக்டோபர் 24 சனி | வேத வாசிப்பு: கொலோசெயர் 4:2-5

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் …. திருவசனம் செல்லும் படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:2,4).
டோசன் ரொட்மன் என்பவர் தனது நண்பர் ஒருவரிடம் எரேமியா 33:3ன் வாக்குத்தத்தத்தை வைத்து தன்னோடு ஜெபிக்க அழைத்தார். அவரும் உடன்பட்டார். இயேசு அதிகாலையில் எழுந்து தனியான இடத்திற்குப் போனார் என்று வாசித்து, இருவரும் ஒவ்வொருநாளும் அதிகாலையில் ஒரு குன்றின்மேல் சந்தித்து, ஜெபிக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் 5 மணி தொடங்கி 7 மணி வரையும் ஜெபித்தனர். அப்போஸ்தலர் 1:8ம் வசனம் அவர்களை உந்தித்தள்ளி, அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தியது. அவர் நடத்திய ஓய்வுநாள் பாடசாலை ஆரம்பத்தில் 6 மாணவர்களைக் கொண்டிருந்தது. அது வளர்ந்து 22 பேர் கர்த்தரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஜெபக்கூட்டத்திலே மற்றப் பட்டணங்களுக்காகவும் ஜெபிக்கத் தொடங்கினர்.
நான்கு வாரங்களின் பின் டோசன் தனது நண்பரிடம், தேவன் தங்களை ஐக்கிய அமெரிக்காவின் எல்லா மாகாணங்களிலும் உபயோகிக்கும்படி ஜெபிக்கும்படி கேட்டார். அதற்கு நண்பனும், தேவன் அதைச் செய்ய வல்லவர் என்று கூறி, அன்றிலிருந்த 48 மாகாணங்களையும் பட்டியலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தான். தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் இருவரும் ஜெபித்தார்கள். 6வது கிழமையில் காலை 4மணி தொடங்கி மூன்று மணிநேரங்கள் ஜெபித்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் உலகப்படம் ஒன்றுடன் மலைக்கெபிக்குச் சென்று தங்கள் விரல்களை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, கிரேக்கம், தாய்வான் போன்ற நாடுகளில் வைத்து ஜெபித்தார்கள். தேவன் இவர்களைக்கொண்டு ஊழியம் செய்தார். தாய்வானில் டோசனின் ஊழியத்தின் மூலம் ஏராளமானவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொண்டார்கள். அநேகர் சீஷத்துவத்தில் வழிநடத்தப்பட்டு, சிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் ஆனார்கள். இன்றும் நேவிக்கேட்டஸின் பின்தொடர் பாடத்திட்டம் புதிய விசுவாசிகளுக்குப் பெரிதும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறது.
நம்மில் எத்தனைபேர் நாம் வாழும் நமதுத் தேசத்தைக் குறித்த பாரத்துடன், ஒவ்வொரு மாகாணமாக, ஒவ்வொரு பட்டணமாக ஜெபிக்கிறோம்? இல்லையானால், இன்றைக்கே தேசப் படத்தை விரித்து வைத்து, ஒவ்வொரு மாநிலங்களுக்காகவும், பட்டணங்களுக்காகவும் கிராமங்களுக்காகவும் ஜெபிக்கத் தொடங்குவோமாக. நம்மைச் சூழவுள்ள நாடுகளுக்காக ஜெபிப்போம். விசேஷமாக தேவனுடைய திருவசனத்திற்குத் தடை விதித்திருக்கும் நாடுகளில் மாத்திரமல்ல, நமது நாட்டிலும் தடைகள் உள்ள இடங்களிலும் திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறக்கும்படி ஜெபிப்போமாக. தேவன் நிச்சயம் அதைச் செய்தருளுவார்.
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, அதிகாலையில் இருவர்கூடி ஜெபித்ததில் ஏற்பட்ட அசைவுகளையும், சீஷர்கள் அநேகர் உருவாக்கப்பட்டதையும் தியானித்தோம். எங்களுக்குள்ளும் அப்படிப்பட்ட ஆத்துமபாரத்தைத் தந்தருளும். ஆமென்.”