சர்வவல்லவரிடம் சமர்ப்பண ஜெபம்

தியானம்: 2026 அக்டோபர் 29 வியாழன் | வேத வாசிப்பு: 1தீமோத்தேயு 2:1-3

YouTube video

… எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் … ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும் (1தீமோத்தேயு 2:1)

இயேசுவில் நாம் பெற்ற இன்பத்தை நமது உறவினர், நண்பர்கள், அயலவர் யாவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வாஞ்சிப்பது அவசியம். ஆனால் இந்த விருப்பமானது, நாம் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களினால் மட்டும் நிறைவேறிவிடாது. அதற்கு ஜெபமும் வேண்டுதலும் மிகமிக அவசியம். மூலமொழியில் வேண்டுதல் என்பது, தீமையினின்று விடுதலை, ஆபத்தில் உதவி என்பது போன்ற, நமக்கு வழியில் வரக்கூடிய தடைகள் நீங்கிப்போக அல்லது அவற்றின் ஊடாக நடத்தப்படக் கேட்பது நமக்கு அவசியமானவற்றுக்காக வாஞ்சிப்பது என்ற அர்த்தத்தையும் கொண்டது. நாம் எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்கவேண்டும். அவர்களுக்கு வரும் தீமைகள் ஆபத்துகளில் தேவன் இடைப்பட்டு அவர்களை விடுவித்து வழிநடத்தும்படி நாம் ஜெபிக்கவேண்டும். அதேவேளை, அவர்களும் இரட்சிக்கப்படவேண்டுமென்று வாஞ்சித்து, தேவனுக்கு முன்பாக அவர்களை ஆசீர்வதித்தும் ஜெபிக்க வேண்டும். இந்த ஜெபங்கள் ஸ்தோத்திரத்துடன் அதாவது நன்றிகூறுதலுடன் ஏறெடுக்கப்படவேண்டும்.

அடுத்த பக்கத்தில் ஒரு தேசத்தின் குடிமக்களாகிய நாம், நல்ஒழுக்கத்துடன் அமைதலான ஜீவியம் பண்ணுவதற்காக, நம்மை ஆளும் அதிகாரிகளுக்காக ஸ்தோத்திரத்தோடே ஜெபங்களை ஏறெடுக்கவேண்டும். அதாவது அதிகாரிகள் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம். இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் இதைக்குறித்து அதிகமாக சிந்திப்பதில்லை. வேதபோதனை யின்படி அதிகாரங்கள் தேவனால் நியமிக்கப்பட்டவையாகும். அதுபோல அதிகாரிகள், நமக்கு நன்மை உண்டாகும்படி நியமிக்கப்பட்ட தேவஊழியர்கள். ஆகவே அவர்களுக்குரிய கனத்தைக் கொடுத்து, கட்ட வேண்டிய வரியை ஒழுங்காகச் செலுத்தி அவர்களுக்காக நாம் விண்ணப்பிக்கவும் ஜெபிக்கவும் வேண்டுமென பவுல் எழுதுகிறார் (ரோமர் 13:1,3,7). அவர்களுக்காக நாம் விண்ணப்பிக்கவும் ஜெபிக்கவும் வேண்டுமென பவுல் எழுதுகிறார். ஆனால் அதிகாரிகளைப்பற்றி தவறான எண்ணம் கொண்டு, உரிய கனத்தையும், வரிகளையும் செலுத்தாதவர்கள் எப்படி அவர்களுக்காக ஜெபிக்கமுடியும்?

ஆகவே இதை உணர்ந்தவர்களாக, அதிகாரிகளுக்குரிய கனத்தை மனப்பூர்வமாகக் கொடுப்போம். வரிகளை ஒழுங்காகச் செலுத்தத் தீர்மானிப்போம். நாட்டில் குழப்பங்கள் ஏற்படும்போது மாத்திரம் ஜெபிப்பவர்களாக இராமல், அனுதினமும் நமது அதிகாரிகளுக்காக ஸ்தோத்திரத்தோடே ஜெபிப்போமாக. இப்படியே எல்லோருக்காகவும் ஜெபிக்கின்ற மக்களாக மாற தேவன் நமக்கு கிருபை செய்வார்.

ஜெபம்: “கர்த்தாவே, நாட்டின் அதிகாரிகளும் மற்றவர்களும் உம்மால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், அவர்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என மற்றவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பவர்களாக எங்களை மாற்றும். ஆமென்.”