நல்ல போராட்டம்

தியானம்: 2026 அக்டோபர் 30 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர்; 6:14-23

YouTube video

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள், அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்” (1தீமோ.6:12)

அன்பு மற்றும் பொறுமையுடன் சேர்ந்த நல்ல போராட்டமே நல்ல போராட்டம் “விசுவாசப் போராட்டமாகும்”. சதுரங்க விளையாட்டில், அதன் நோக்கமே எதிரியின் ராஜாவைத் தப்பியோடவிடாது சிறைப்படுத்துவதுதான். இதற்குத் திட்டம்போட்டே சதுரங்கம் விளையாடும் வீரர்கள் காய்களை நகர்த்துவர். நமது காய்களில் சிலவற்றை எதிரி வெட்டிவிட்டான் என்பதற்காக, நமது இறுதி இலக்கை மறந்து, நாமும் அவனது காய்களை வீழ்த்தவேண்டும் என்று வீறாப்பு கொண்டால் விளையாட்டு தோல்வியில்தான் முடியும். நமது காய்கள் சில போனாலும், அதைப் பொருட்படுத்தாது, இறுதி இலக்கை நோக்கமாகக் கொண்டு திட்டமிட்டு விளையாடும் சதுரங்க விளையாட்டே இறுதியில் வெற்றிபெறும்.

ஒருவிதத்தில் கிறிஸ்தவ போராட்டமும் இப்படிப்பட்டதுதான். பொறுமை, சாந்தம் என்பவையே நமது போராட்டத்தின் போர்நியதிகள். தேவன் நமக்குத் தரும் பணியை அவரது நாமத்தின் மகிமைக்காகப் பொறுமையுடன் செய்திடுவதே நமது இலக்கு. இந்த இலக்கை மறந்து, வேறு நோக்கங்களை நாடுவோமானால், அது நம்மைத் தோல்வியில்தான் கொண்டுபோய்விடும். பொறுமை, அன்பு ஆகியவற்றை விட்டுவிட்டு, குறுக்கு வழியில் நமது இலக்கை அடைய முற்பட்டால் அந்தப் போராட்டம் எப்படிப்பட்டது தெரியுமா? சாத்தானால் சோதிக்கப்பட்டும், தனது பாடுநிறைந்த பாதையை விட்டுவிலகாதவராக, இலகுவான வழியைத் தேடாதவராக, சிலுவைவரை சென்று வெற்றிசிறந்த நமது ஆண்டவராகிய இயேசு சென்ற வழியை அது அவமதிப்பது போலாகிவிடும். ஆனால் குறுக்கு வழியில் செல்லும்போது அது சிலசமயம் வெற்றி பெறுவதுபோல நமக்குத் தெரியலாம். அது வெறும் தோற்றம் மட்டுமே. ஆனால் தோல்விதான் நிஜம்.

சிலுவைப்பாடு, மரணம், உயிர்த்தெழுதல் மூலமாக ஆண்டவர் நமக்கு நித்திய ஜீவனுக்கு வழி திறந்துள்ளார். அந்த வழியிலே நித்திய ஜீவன் ஒன்றையே இலக்காக வைத்து பொறுமையுடனும் விசுவாசத்துடனும் ஓடவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த இலக்கை நாம் இழந்துவிட்டால், நாம் ஓடுவதில் என்ன பலன்? எனவே பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, அவரவருக்கு நியமித்த ஓட்டத்திலே பொறுமையோடே, அந்த இலக்கை மாத்திரமே நோக்கி ஓடக்கடவோம். இதுதான் ஒரு கிறிஸ்தவன் அடையக்கூடிய, அடையவேண்டிய வெற்றி. நாம் இன்று எந்த வழியில் ஓடிக்கொண்டிருக்கிறோம்? எந்த நோக்கத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்? வெற்றியடைவதல்ல முக்கியம். சரியான வழியில் சென்று வெற்றியடையவேண்டும். அதுதான் முக்கியம்.

ஜெபம்: “சிலுவை நாதரே, நித்திய ஜீவனுக்கான இலக்கை, உலகம் காட்டுகின்ற வழியில் சென்றடையாமல், உமது வழியில் மாத்திரம் நடந்து வெற்றியடைய உமது கிருபை தாரும். ஆமென்.”