தேவனுடைய நகரம்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 48; வெளி. 21: 1-6

நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 48:8).

காலங்கள் செல்லச்செல்ல, பேரரசுகளும், தேசங்களும், நகரங்களும், அவற்றின் புகழ்பெற்ற தலைவர்களும் தோன்றி மறைகின்றனர்; ஆனால் எருசலேம் நகரம் என்றென்றும் நிலைத்திருக்கும்! வேறு எந்த நகரத்துக்கும் இத்தகைய சிறப்பை நாம் கொடுக்கமுடியாது. ஆதியாகமம் 14:18 ல் தொடங்கி வெளிப்படுத்தல் 21:10 முடிய எண்ணூறுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. (‘சாலேம்’ எனில் சமாதானம் என்று பொருள்; எபிரெயர் 7:1-10). எருசலேம் எத்தகைய நகரம்?

தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நகரம்: தேவன் தமது கிருபையும் வல்லமையுள்ள சித்தத்திலும் செய்த எண்ணற்ற தெரிவுகளில் இரட்சிப்பின் வரலாறும் அடங்கியுள்ளது. முதலாவதாக அவரது படைத்த எல்லா வான மண்டலங்களிலும் தமது திட்டம் நிறைவேற்றப்படும் ஓர் இடமாக பூமியைத் தெரிந்தெடுத்தார் (சங்.24:1). தேவனுடைய வார்த்தையையும் அவருடைய குமாரனையும் உலகிற்குள் கொண்டுவர யூதர்களைத் தெரிந்தெடுத்தார் (உபாகமம் 7:6). ஏனெனில் இரட்சிப்பு யூதர்களிடமிருந்து வருகிறது (யோவான் 4:22). தமது மக்களான இஸ்ரவேலரின் தாயகமாக அவர் கானானைத் தேர்ந்தெடுத்தார் (உபா.1:8). மேலும் சீயோன் மலையை அத்தேசத்தின் தலைநகரின் இருப்பிடமாகத் தெரிவு செய்தார். கர்த்தர் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் இருப்பிடமாகவும் எருசலேம் இருக்கும் (சங். 132:13-18). காத்தர் தெரிந்துகொண்ட நகரம் எருசலேமே (சகரியா 3:2). இயேசு கிறிஸ்துவை உலகிற்குக் கொண்டுவரும் வம்சத்தை நிறுவ தாவீதை தேர்ந்தெடுத்தார் (1 இராஜா.11:34). என்னே ஒரு சிறப்பான நகரம்!

குற்றமுள்ள ஒரு நகரம்: எருசலேம் ‘ஒரு பரிசுத்த நகரம்’ (நெகேமியா 11:1,18; ஏசாயா 48:2, மத். 4:5; 27:53); அது ‘கர்த்தருடைய நகரம்’ (சங்கீதம் 46:4; 48:1; ஏசாயா 60:14). பண்டைய யூத மக்கள் அந்நகரத்தைக் குறித்து பெருமையுடன் அதனை ‘அழகின் பரிபூரணம், சர்வ பூமியின் மகிழ்ச்சி’ (புலம்பல் 2:15) என்று கொண்டாடினர். ஆனால் தேவனுடைய குமாரன் இயேசு பூமிக்கு வந்தபொழுது அந்நகரம் தீட்டுப்பட்டு அடிமைத்தனத்தில் இருப்பதைக் கண்டு, குற்றமுள்ள அந்த நகரத்துக்காக அழுதார் (மத்தேயு 23:25-69; லூக்கா 13: 34,35).

பரலோக நகரம்: (எபிரெயர் 12:18,24). கிறிஸ்தவர்களின் மலை இப்பூமியில் இல்லை; இயேசுவும் இப்புனித பூமியில் இல்லை; நம்முடைய பிதாவும் இரட்சகரும் பரலோகத்தில் இருக்கிறார்கள். நம்முடைய வீடும் வீதியும் அங்குதான் உள்ளன. நம்முடைய பொக்கிஷங்களும் அங்கேதான் இருக்கவேண்டும் (மத்தேயு 6:19-21), கிறிஸ்தவர்கள் மேலேயுள்ள இஸ்ரவேலுக்கு உரியவர்கள் என்று கலா. 4:31-32 விளக்குகிறது. ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் பரலோகத்தின் குடிமக்கள் (பிலிப்பியர் 3:20). முற்காலத்து கோத்திரப்பிதாக்கள் போல நாம் இப்பூமியில் நாடோடிகளும், மோட்சப் பயணிகளாகவும் இருக்கிறோம். நம்முடைய நிரந்தர குடியிருப்பான பரலோகத்தை நாடிச்செல்லுகிறோம் (எபி.11:13-16). எனவே நாம் கிறிஸ்து இருக்கும் மேலான காரியங்களையே தேடவேண்டும். நமது மனதை பூமியில் உள்ள காரியங்கள் மீது அல்ல, மேலான காரியங்கள் மீது நாட்டம் வைக்கவேண்டும் (கொலோசேயர் 3:1-2). இறுதியில் அனைத்தும் தேவனிடமிருந்தே வரவேண்டும். சங்கீதம் 87 ஐ எழுதிய கோராகின் புத்திரர் பூமிக்குரிய சீயோனைப் பற்றி எழுதினார். ஆனால் அதை நாம் பரலோக சீயோனுக்குப் பொருத்தி “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று சொல்லலாம். இயேசு தம்மிடம் வந்து பானம் பருக நம்மை அழைக்கிறார் (யோவான் 7:37- 39).

ஒரு நித்திய நகரம்: புதிய வானமும் புதிய பூமியும் ஒரு நாள் உண்டாகும். புதிய எருசலேம் நகரம் தேவனிடமிருந்து பூமிக்கு இறங்கி வரும் (வெளி 21:1-6). இது “தேவன் (எருசலேமை) என்றென்றைக்கும் நிலைநிறுத்துவார்”; என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருக்கும். வெளிப்படுத்தல் புத்தகத்தின் கடைசி இரண்டு வசனங்கள் அந்த நகரத்தின் மகத்துவத்தையும் மகிமையையும் விவரிக்கின்றன. மகிமைப்படுத்தப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் புதிய பூமியில் உள்ள பரலோக நகரத்தில் வீடுகளையும், அதற்குள் செல்லும் வழியையும் கொண்டிருப்பார்கள். யூதர்களும் மற்ற இனத்தவரும் அந்த நகரத்தில் ஒன்றுபடுவார்கள். ஏனெனில் அதன் வாசல்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களும், பன்னிரண்டு வாயில்களுக்கு அப்போஸ்தலர்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன (வெளி. 21:9-15). “நான் உங்களுக்காக ஒரு இடத்திற்குப் போகிறேன்,” என்று இயேசு அறிவித்திருக்கிறார் (யோவான் 14:1-3).

ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர், “மத்திய கிழக்கின் சமாதானத்துக்கு எருசலேமே திறவுகோல்” என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. “எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபியுங்கள”; (சங்கீதம் 122:6) என்ற வசனமும் என் நினைவுக்கு வந்தது. நீங்கள் எருசலேமுக்காக ஜெபிக்கிறீர்களா?

சகோதரர்களே, அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின்
விருப்பமும் நான் தேவனிடம் நான் செய்யும் ஜெபமுமாகும் (ரோமர் 10:1).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)