ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“பாலகனாய்” இவ்வுலகில் அவதரித்த நமதாண்டவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற தேவன் இவ்வருடத்தில் நம்மை நன்மையாய் நடத்தினார். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20) என்று வாக்குப்பண்ணினவர் வாக்கு மாறாதவராய் நாம் கடந்துவந்த வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும், குறைவிலும் நிறைவிலும் நம்மோடுகூடவே இருந்து நம்மை பாதுகாத்தார். இவ்வருடம் முழுவதும் பங்காளர்களும் ஆதரவாளர்களும் ஜெபத்தோடு சத்தியவசன ஊழியத்தைத் தாங்கிவந்தீர்கள். அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களுடைய மேலான ஆதரவினால் சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஊடகங்கள் மூலமாகவும் மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும் நற்செய்தி தடைகளின்றி அறிவிக்கப்பட கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!
இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம் போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.
இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், டிசம்பர் மாத தியானங்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இந்த பண்டிகை காலங்களில் கிறிஸ்து பிறப்பின் செய்தியை நாம் எவ்வளவாய் அறியாதமக்கள் மத்தியில் கொண்டுசெல்கிறோம் என்பதை தியானித்து வழங்கியுள்ளார்கள். இத்தியானங்களை வாசித்து சிந்தித்து நம் வாழ்வில் அப்பியாசப்படுத்த ஆவியானவர் உதவிசெய்வார். சத்தியவசன பங்காளர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
ஆ.ஜான் துரை