ஜெயங்கொண்ட வாழ்வு
தியானம்: 2026 நவம்பர் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 41:1-13

என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன் (சங்.41:11).
தேவன் கிருபையாய் இப்புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கச் செய்திருக்கிறார். இம்மட்டும் வழுவாதபடி நம்மை நடத்தின கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், நான் தப்புவிப்பேன் (ஏசாயா 46:4) என்று வாக்குப்பண்ணின தேவன் நம்மை கரம்பிடித்து நடத்துவார்.
நாம் திடகாத்திரமாய் ஆரோக்கியமாய் வசதியாக இருக்கையில் தேவனைத் தேடுவதைப் பார்க்கிலும், வருத்தத்தில், தேவைகளில், மனகிலேசத்தில் இருக்கும்போது, தேவனைத் தேடுவது அதிகமாய் இருக்கும் என்பதை எவருமே மறுக்கமுடியாது. நமக்கு போக்கிடம் இல்லை என்றபோது, தேவ பாதத்திலேயே விழுந்துகிடப்போம். அப்படியொரு நிலையில்தான் இந்த சங்கீதத்தை எழுதிய தாவீது புலம்புகிறான்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவனுடைய ஜனங்கள் பாவம் செய்தபோதெல்லாம், தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்தபோதெல்லாம், அந்நியர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் மனந்திரும்பி தேவனை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் தேவன் அவர்களை மீட்டுக்கொள்வதை திரும்ப, திரும்ப வாசிக்கலாம். அப்படி மனந்திரும்பாவிட்டால், அவர்கள் ஒரு வாதையினால், நோயினால் வாதிக்கப்படுவர். பின்பு தேவனை நோக்கிக் கூப்பிட்டு அதிலிருந்து விடுதலை பெறுவர். அன்று தேவனுடைய தண்டனை உடனுக்குடன் வந்தது.
இங்கே தாவீதும் தனது பகைவர் தனக்கு எதிராகச் செயற்படுவதையும், தனக்கு எதிராக அவர்கள் குதிங்காலைத் தூக்குவதையும் குறிப்பிடுகிறார். படுக்கையிலிருக்கும் இவன் இனிப் பிழைக்கமாட்டான்; தீராத வியாதியாலே பீடீக்கப்பட்டுள்ளான்; இனி எழுந்திருக்கமாட்டான் என்று தனக்கு விரோதமாக சத்துருக்கள் பேசியதைக் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் நம்பிக்கையாய் அவர் சொல்லுகிறார்: “என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினாலே நீர் என் மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” என்பதாகும். அக்காலத்தில், ஒருவன் தேவனுக்குப் பிரியமாய் இல்லாமற்போனால் அவன் சத்துருவாகிய மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவான் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்திலோ நமக்கு மனுஷரோடு போராட்டம் இல்லை என்பதும், அந்தகாரலோகாதிபதியாகிய பிசாசானவனோடும், நமது உள்ளான மனுஷனாகிய பாவசுபாவத்தோடுமே நமக்குப் போராட்டம் உண்டு என்பதுவும் தெளிவு. அதனால்தான் இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னரே சாத்தானை வெற்றிகொண்டார்; உலகத்தையும் வெற்றிகொண்டார்.
இயேசுவோ, எந்த மனிதனோடும் சண்டைபோடவில்லை. அதுபோலவே நாமும் தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாய் வாழ்ந்து அவருடைய தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ள வேண்டுமாயின், நமது உள்ளான மனிதனைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டும். பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கவேண்டும். இப்படியாக கிறிஸ்துவின் வல்லமையோடு முற்றிலும் ஜெயங்கொண்ட வாழ்வை வாழ்வோமாக. பாவத்தை எதிர்த்து பரிசுத்தமாய் வாழுவோமாக.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உமது வல்லமையினால் முற்றிலும் ஜெயங்கொண்ட வாழ்வை வாழ எங்களுக்கு அனுக்கிரகம் செய்யும். ஆமென்.