தேவனுடைய திட்டம்
தியானம்: 2026 நவம்பர் 4 புதன் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 14:1-20

இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள் (நியாயாதிபதிகள் 14:4).
ஆதியாகமத்திலே யோசேப்பின் ஆரம்ப வாழ்வைப் பார்த்தால், அவன் ஏதோ ஆளுகை செய்யப்போகிறவன் போன்ற கனவுகள் அவனுக்கு வந்தது. கனவை வியாக்கியானம் செய்யும் தாலந்தும் அவனுக்குள் மறைந்து கிடந்தது. எனவே அவன் கனவைக் கண்டதும் தனக்கு நலமான காரியம் நடக்கப்போகிறது என்று அறிந்தவனாக, தனது தகப்பன், சகோதரரிடத்தில் அறிவித்தான். ஆனால் அதுவே அவனுக்கு வினையாக அமைந்தது. சகோதரர் அவனில் கோபப்பட்டு அவனுக்கு விரோதமாக எழுந்தனர். பிறகு அவனது வாழ்வில் எல்லாமே தப்பாகப் போவது போலவே இருந்தது. சகோதரர்களின் வெறுப்பைச் சம்பாதித்தான். அவர்களால் குழிக்குள் போடப்பட்டான், விற்கப்பட்டான். போத்தி பாரின் மனைவியால் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள்ளும் தள்ளப்பட்டான். ஆனால் கடைசியில் அவனது கனவு போலவே தேவனுடைய திட்டம் நிறைவேறியது.
அதுபோலவே இங்கேயும் சிம்சோன் பிறப்பதற்கு முன்பே, சிம்சோன் மூலமாகத்தான் இஸ்ரவேலரை பெலிஸ்தரின் கையினின்று விடுவிக்க வேண்டும் என்பதாகவே தேவ திட்டம் இருந்தது. அதனாலேயே அவனை நசரயேனாக வளர்க்கும்படிக்கு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்பொழுது அவன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணப்போகிறேன் என்றதும், பெற்றோர் தடுக்கின்றனர். தேவன் இவனைக்கொண்டு அழிக்க நினைத்த இனத்துக்குள்ளேயே சம்பந்தம் கலப்பதா என்று நினைக்கின்றனர். ஆனால் அதிலும் கர்த்தரின் திட்டம் நிறைவேறும்படியாக அவருடைய செயல் இருக்கிறது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். கடைசியில் என்ன நடந்தது? அந்தப் பெண்ணை அவன் விவாகம் பண்ணவும் இல்லை. ஆனால் அங்கு நடந்த பல சம்பவங்களால் அதிகமான பெலிஸ்தரை அவன் கொன்றுபோட்டான். சிம்சோனைக் கொண்டு பெலிஸ்தரை அழிக்கவேண்டும் என்ற தேவனுடைய திட்டம் மட்டுமே அங்கு நிறைவேறியது.
நமது வாழ்விலும் பலவேளைகளிலும், காரியங்கள் தவறாக செல்வதுபோல தெரியலாம். நாம் எதிர்பாராத விதமாகக் காரியங்கள் நடக்கிறதே என்று யோசிக்கும்படியான ஒரு நிலைக்கும் நாம் தள்ளப்படலாம். ஆனால் முடிவில் தேவன் அதைத் தமது திட்டத்தின்படியே, நாம் நினையாத வழிகளில் நன்மையாக மாற்றிவிடுவார். இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதை வாசிக்கும் அருமையான தேவபிள்ளையே, இன்று பாதகமான சூழ்நிலைகள் உனது வாழ்க்கையின் அனுபவமாகக்கூட இருக்கலாம். கலங்காதே! கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவராயும், சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டவராயும் இருக்கிறார்.
ஜெபம்: “எங்கள் பரலோக பிதாவே, எவ்வித பாதகமான சூழ்நிலையென்றாலும் அவற்றையும் நன்மைக்கேதுவாய் முடியப்பண்ணுகிற உமது கரத்தில் எங்களை ஒப்புவித்து ஜெபிக்கிறோம். ஆமென்.”