தேவனுடைய அபிஷேகம்
தியானம்: 2026 நவம்பர் 5 வியாழன் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 16:1-6

பின்பு சிம்சோன் காசாவுக்குப்போய் … தெலிலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான் (நியா. 16:1,4).
இன்று ஊழியர்களின் திடீர் வீழ்ச்சிகள் குறித்து அதிகமாகவே கேள்விப் படுகிறோம். வல்லமையாக ஊழியம் செய்தவர்கள், ஊழியத்தில் அநேக அற்புத அடையாளங்களை நடப்பித்தவர்கள் திடீரென பாவத்தில் வீழ்ந்துவிட்டனர் என்று கேள்விப்படும்போது, நாமும் அதிர்ந்துபோய் நிற்கிறோம். அது எதுவுமே திடீரென நடப்பவையல்ல. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வழியை விட்டு, அவரது வார்த்தையை விட்டு விலகிப்போய் பின்பு பாவத்துக்குள்ளே விழுந்து, அவர்களுடைய வாழ்வு மாறிப் போய், இப்படியாகப் படிப்படியாகவே வீழ்ச்சி நடக்கிறது. ஆனால் எல்லா உண்மைகளும் ஒருநாள் வெளிவரும்போது, அது நமக்குத் திடீரென நடந்ததுபோல தெரிகிறது.
இங்கே சிம்சோனுக்கும் அதுதான் நடந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கென்று, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு பிள்ளையாய் பிறந்தான். அவனை தேவனுடைய திட்டத்திற்கென்று பெற்றோர் மிகவும் கவனமாக வளர்த்தனர். தேவனுக்கென்று நசரேயனாய் வளர்க்கப்பட்ட அவன் மீது தேவனுடைய அபிஷேகம் இருந்தது. அந்த அபிஷேகத்தினாலே எத்தனை பேரையும் அடித்து வீழ்த்தக்கூடிய பெலன் அவனுக்குள் இருந்தது. ஆனால் அவனது நடவடிக்கைகளோ தேவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லை. ஆனாலும் தேவன் உடனே தனது அபிஷேகத்தை அவனை விட்டு எடுக்கவில்லை. கடைசியில் அவன் போன பிழையான வழியின்மூலமாகவே அவன் தேவ அபிஷேகத்தையும் இழந்துபோனான். இதுபோலவே தேவனைவிட்டு வழி விலகிப் போகும் ஒவ்வொரு ஊழியரும் உடனேயே அவருடைய அபிஷேகங்களையும், வரங்களையும் இழந்து போவார்கள் என்று சொல்லமுடியாது. அபிஷேகங்களால், அற்புதங்களால் அவர்கள் மனிதரைக் கவர்ந்து, தங்கள் ஊழியங்களைக் கொண்டுபோகலாம். ஆனால் ஒருநாள் எல்லாமே வெளிச்சத்திற்கு வரும். தேவனோடு அநேக நாட்கள் நாம் விளையாடிக்கொண்டு இருக்கமுடியாது.
அருமையானவர்களே, நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோமோ இல்லையோ அது காரியமல்ல. தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதே காரியம். அவரது வார்த்தையைத் தியானித்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழுவோமாக. ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து தேவனோடு உள்ள உறவைத் தக்கவைத்துக் கொள்ளுவோமாக. அப்பொழுது ஒருநாளும் தேவனைவிட்டு விலகிப் பாவத்துக்குள் விழுந்து போகமாட்டோம். “நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உமது வசனத்தை என் உள்ளத்தில் வைத்து வைத்திருக்கிறேன்” என்ற சங்கீதக்காரனின் ஜெபம் இன்று நம்முடையதாகட்டும்.
ஜெபம்: “பரிசுத்தமுள்ள ஆண்டவரே, அனுதினம் உம்முடைய சத்தியவார்த்தையை தியானித்து, ஜெபத்தில் தரித்திருந்து கிறிஸ்துவுக்குள்ளான உறவில் நாங்கள் பெலப்பட வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.”