தேவனைவிட்டு விலகல்

தியானம்: 2026 நவம்பர் 6 வெள்ளி | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள்; 16:7-21

YouTube video

… அவன் நித்திரையைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல் … வெளியே போவேன் என்றான் (நியாயாதிபதிகள் 16:20).

ஒரேநாளிலே ஏவாள் பழத்தைப் பறித்துப் புசித்து பாவத்தில் விழுந்ததுபோல, நாம் விழுந்துபோக மாட்டோம். நாங்கள் கடவுளுக்குள் நல்ல உறுதியானவர்கள் என்று சொல்லிக்கொண்டே, படிப்படியாக பாவத்தில் இழுப்புண்டு போய் விழுந்துவிடுவோம்.

சிம்சோனுக்கும் அதுதான் நடந்தது. தெலீலாள் என்ற பெண்ணோடே சிநேகமாய் இருந்தான். அவள் பெலிஸ்தரின் கையாளாக இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் சிம்சோனின் பெலன் எங்கேயிருக்கிறது என்று அறியும் பொருட்டு அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தாள். அவள் அனுதினமும் இதையே கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்றால் அது அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கவேண்டிய ஒரு விஷயம். ஆனாலும் அவள்மீது அவனுக்கிருந்த மோகம் ஒருவேளை கண்ணை மறைத்துவிட்டதுபோலும். அவனும் அதைச் சொல்லாமல், பல்வேறு காரணங்களைச் சொல்லியும், அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை. கடைசியில் உண்மையைக் கக்கிவிட்டான். அதுவே அவனுக்கு வினையாகிற்று. அவன் தலைமயிர் கத்தரிக்கப்பட்டதும், தேவனுடைய ஆவியானவர் அவனிடத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவன் தேவனை விட்டு விலகினான், இப்போது தேவனும் அவனைவிட்டு விலகி விட்டார். அவன் அதை அறியாதவனாக நன்றாகத் தூங்கி பெலிஸ்தரை முறியடிப்பேன் என்று வழக்கம்போல எழுந்தான். அவனது பெலன் அற்றுப்போயிருந்தது. பெலிஸ்தர் அவனைப் பிடித்து, கண்களைப் பிடுங்கி, மா அரைக்கும்படி சிறைச்சாலையிலே போட்டுவிட்டார்கள்.

இதே நிலைதான் இன்று அநேக விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் நடக்கிறது. அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைவிட்டு விலகும்போது, கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வழியை விட்டு, பிழையான வழிக்குள் சென்று தங்களையே இழந்துவிடுகிறார்கள். தங்களுக்குள்ள வரங்களையும், தாலந்துகளையும் கண்டு அதன் மூலமாகப் பிரபல்யம் அடைந்துகொண்டு தாங்கள் இன்னமும் தேவனுக்குள்தான் இருக்கிறோம் என்ற பொய்யான மாயையை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கர்த்தருடைய கிருபை தங்களோடு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பாவத்துக்குள் விழுந்து போகிறார்கள். இவ்விதமாக அநேகருடைய மனதைப் பிசாசானவன் இன்று குருடாக்கிக் கொண்டு வருகிறான். நாம் அதிக ஜாக்கிரதையோடு நடந்து கொள்வோம்.

எப்போதும் நாம் தேவனோடுள்ள உறவைக் காத்துக்கொள்ளவேண்டும். அதில் ஒரு சிறு இடைவெளியை நாம் விட்டுவிட்டால் அதற்குள் பிசாசானவன் புகுந்து நம்மைக் கெடுத்துப்போடுவான். கர்த்தரோடு நடப்போம்.

ஜெபம்: எங்களை போதித்து நடத்தும் அன்பின் கர்த்தாவே, தேவனோடுள்ள உறவை மாசுபடுத்த ஒரு சிறுஇடைவெளிக்காக காத்திருக்கும் பிசாசுக்கு இடங்கொடாமல் ஜாக்கிரதை யோடிருக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.