தேவனின் தயவு!

தியானம்: 2026 நவம்பர் 7 சனி | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 16:22-31

YouTube video

இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள் (நியா.16:30).

ஒருவன் சாகும் தருவாயிலோ, அல்லது பல வருடங்களுக்கு முன்போ, அல்லது சிறுவனாக இருக்கும்போதோ, எப்போது ஒருவன் தன் பாவங்களை உணர்ந்துகொண்டு மனந்திரும்புகிறானோ அந்த நேரத்திலேயே அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதற்கு தேவன் தயவுள்ளவராக இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இங்கே சிம்சோன் தேவனுடைய பெலத்தை இழந்தான், அவனுடைய கண்களை இழந்தான். புறமதத்தவரிடையே ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் நின்றுகொண்டிருக்கிறான். அவர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாட பெரிய விழா எடுத்து எல்லோரும் ஒரு மண்டபத்தில் கூடியிருக்கிறார்கள். தங்களுக்குள் வேடிக்கை பார்த்து சிரிப்பதற்காக சிம்சோனை அங்கு கொண்டுவருகிறார்கள். சிம்சோனின் நிலை என்ன பரிதாபம் பார்த்தீர்களா! பல பெலிஸ்தரை ஒரே அடியில் கொன்றுபோட்ட சிம்சோன் இப்போது கைலாகு கொடுக்கிறவர்களின் தலைமையில் நடந்து வருகிறான்.

தனது இயலாமையில் அவன் தேவனை நோக்கி, “தேவனே, இந்த ஒருவிசை என்னை நினைந்தருளும். ஒருவிசை எனக்கு உமது பெலத்தைத் தாரும்” என்று வேண்டிக்கொண்டு, அவன் கட்டப்பட்டிருந்த அந்த இரண்டு தூண்களையும் தனது இரு கைகளாலும் அசைத்தபோது, அவைகள் விழுந்து அந்த மண்டபம் முழுவதும் இடிந்து விழுந்தது. அங்கிருந்த அத்தனை பெலிஸ்தரும் மாண்டுபோயினர். அவன் உயிரோடு இருந்தபோது கொன்றவர்களைப் பார்க்கிலும், இப்போது அவன் நிமித்தம் கொல்லப்பட்டவர்கள் அநேகராய் இருந்தார்கள்.

தனது பிழையை உணர்ந்தவனாய், தேவனை நோக்கி ஜெபித்த சிம்சோனின் ஜெபத்தைக் கேட்டு தேவன் இந்த மகத்தான காரியத்தை சிம்சோனைக் கொண்டு செய்தார். இஸ்ரவேலரை பெலிஸ்தரின் கையினின்று சிம்சோனைக் கொண்டு விடுவிப்பதே தேவனின் நோக்கமாய் இருந்தது. அதற்காக சிம்சோன் எப்படி வழிவிலகிப் போனாலும் பரவாயில்லை என்று தேவன் அவனுக்குப் பெலத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கவில்லை. அவன் அவரை விட்டுப்போனபோது, தேவனும் அவனை விட்டுப் போய்விட்டார். இப்போது அவன் மனம்வருந்தி ஜெபித்துக் கேட்டபோது, தேவன் ஜெபத்தைக் கேட்டு, அவன் மூலமாகவே பெலிஸ்தரை நியாயம் விசாரித்தார்.

இது நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? நாம் தேவனோடு இருந்தால் அவரும் நம்மோடு இருப்பார். நாம் தேவனைவிட்டு விலகினால், அவரும் நம்மை விட்டு விலகுவார். எனவே நாம் எந்த சூழ்நிலையிலும் தேவனை விட்டு விலகாதவர்களாய் இருக்க ஜாக்கிரதையாய் இருப்போம்..

ஜெபம்: கர்த்தாவே, நீர் எங்களுக்கு பாராட்டின தயை பெரிது. தேவனுடைய தயையிலே நிலைத்திருந்து கனி கொடுக்கவும், இறுதிவரை உத்தமமாய் உமது ஊழியத்தைச் செய்ய எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.