யார் நமது வழிகாட்டி?
தியானம்: 2026 நவம்பர் 8 ஞாயிறு | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 17:1-13

அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்துவந்தான் (நியாயாதிபதிகள் 17:6).
வகுப்பாசிரியர் இல்லையென்றால் பிள்ளைகள் எப்படி வகுப்பறையிலே ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் எப்படி வகுப்பறையில் இருக்கவேண்டும் என்பதும் பிள்ளைகளுக்குத் தெரியாமலில்லை. எல்லாம் தெரிந்திருந்தும், ஆசிரியர் இல்லைத்தானே, நம் இஷ்டத்துக்கு இருப்போமென சகஜமாகவே எண்ணுகிறார்கள்.
அதுபோல ஒரு காரியம்தான் இங்கேயும் நடக்கிறது. மீகா என்பவன் தனது தாயிடமிருந்து சில வெள்ளிக் காசுகளைத் திருடி வைத்துக்கொண்டான். இப்போது அதைத் திரும்பத் தாயினிடத்தில் கொடுத்தபோது, அவள் அதிலிருந்து 200 வெள்ளிக்காசை தட்டான் கையில் கொடுத்து ஒரு சொரூபத்தை வார்ப்பித்து அதைத் தன் வீட்டிலே கொண்டுவந்து வைத்தாள். அப்போது, மீகா சுவாமிக்கு ஒரு அறை வீட்டைக் கட்டி, தனது மகனை அதற்கு ஆசாரியனாக வைத்தான். அந்நாட்களில் ஒரு லேவியன் தங்குவதற்கு இடங்கேட்டு அங்கு வந்தபோது, அவனைத் தனது சுவாமிக்கு ஆசாரியனாக இருக்கும்படிக்கும், அங்கு தங்கியிருக்கும்படிக்கும், தான் அவனுக்குக் கூலி கொடுப்பதாகவும், பேசி ஒழுங்கு பண்ணிக்கொண்டான்.
அந்நாட்களில் ராஜா இல்லை என்றபடியால் அவனவன் தன் தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தனர். வழிநடத்துவதற்கு ராஜா இல்லை. ஆனால் ஆண்டவர் கொடுத்த வார்த்தைகள், பிரமாணங்கள் யாவும் அங்கே இருந்தன. மக்கள் அதை கடைபிடிக்காமல் தங்கள் இஷ்டத்துக்குத் தங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்ய தீவிரித்தார்கள். மீகா தான் எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்ததின் நிமித்தம் கர்த்தர் தனக்கு நன்மை செய்வார் என்று போலி நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால் நடந்தது என்ன? அவனுடைய சுவாமியும், அஸ்தரோத்துக்களும், ஆசாரியனும் எல்லாமே அவனை விட்டு எடுபட்டுப்போயின. மீகா, தாண் புத்திரரை தொடர்ந்து வந்து நான் உண்டாக்கின தெய்வங்களை நீங்கள் ஏன் எடுத்துக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்பதை 18ம் அதிகாரத்தில் காண்கிறோம்.
இன்று நாமும்கூட ஆண்டவரையும், அவரது வார்த்தைகளையும் விட்டு, நமக்கென்று தெய்வங்களை உருவாக்கிக்கொண்டு அதிலே வாழுகிறோமா? வேதாகமத்தைத் தியானித்து, தேவன் என்னோடு என்ன பேசுகிறார் என்பதைக் கேளாமல், மற்றவர்கள் கூறுவதை மட்டுமே தியானிக்கிறோமா? அது நல்லதல்ல. வசனத்தை மட்டுமே நாம் தியானிக்க வேண்டும். “உமக்கு விரோதமாக நான் பாவம் செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்தேன்” என்று சங்கீதக்காரர் சொல்லும்போது, அதை நாம் தியானித்தால் தானே அப்படியாக ஜீவிக்க முடியும்.
ஜெபம்: எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறீர். உமது சத்தியத்திலே எங்களை நடத்தி, எங்களைப் போதித்தருளும். ஆமென்.