பாவத்துக்குத் துணைபோதல்

தியானம்: 2026 நவம்பர் 9 திங்கள் | வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 19:10-30

YouTube video

பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்.. யுத்தம் பண்ண … கூடினார்கள் (நியா.20:13,14).

இஸ்ரவேலிலே ராஜா இல்லாததினாலே, இங்கு இன்னுமொரு கடுமையான அல்லது ஒரு ஆழமான சம்பவம் நடக்கிறது. லேவியனான ஒரு மனுஷன் பென்யமீன் கோத்திரத்துப் பெண்ணை தனக்கு மறுமனையாட்டியாகக் கொள்ளுகிறான். அவளோ அவனை விட்டு ஓடி தனது தகப்பன் வீட்டிற்குச் சென்று விடுகிறாள். இந்த மனுஷன் அவளைத் தேடிப்போய் தன்னோடு அழைத்து வருகிறான். வழியில் நெடுந்தூரப் பயணம் என்றபடியால் இராத் தங்கும்படிக்கு கூட வந்தவன் ஆலோசனை சொன்னபோது, இஸ்ரவேல் அல்லாத புற இடத்திலே தங்குவது நல்லதல்ல நாம் சற்று தள்ளிப்போவோம் என்று சொல்லி, கடைசியில் இஸ்ரவேல் தேசத்துக்குள் இருந்த கிபியா என்னும் இடத்திற்கு வந்து அங்கே இராத் தங்கியிருக்கிறார்கள்.

நடு இரவிலே அவ்விடத்துப் பேலியாளின் மனுஷர் வந்து அவனது மறுமனையாட்டியை இரவோடு இரவாகக் கெடுத்து, அவளைக் குற்றுயிராய் விட்டுச் செல்கின்றனர். அவளது கணவன் அவளைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரவேலின் கோத்திரங்களுக்கெல்லாம் அனுப்பி வைக்கிறான். இதைக் கண்டு இப்படியொரு அநியாயம் நடந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்தப் பேலியாளின் மக்களை ஒப்படைக்கும்படிக்கு பென்யமீன் கோத்தி ரத்தாரைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் சகோதரர் சொல்லைக் கேளாமல், இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணக் கிளம்பினார்கள்.

தேவன் இஸ்ரவேலருக்குத் துணைநின்றார்; பென்யமீன் கோத்திரம் முற்றாக அழிக்கப்பட்டுப்போயிற்று. இங்கே தவறு செய்த கிபியோனியரை ஒப்புக்கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது. ஆனால் அவர்கள் பாவத்துக்குத் துணைபோனதால் அழிந்து போனார்கள். நாம் ஒருபோதும் பாவத்துக்குத் துணைபோகக் கூடாது. நமது தேவன் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்களை உடையவர் என்று வேதாகமம் கூறுகிறது. அவரை ஆராதிக்கும் நாம் பாவம் செய்வதும், பாவத்துக்குத் துணை போவதும் கூடாதே. நம்மை அழைத்தவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நாமும் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே நம்மில் தேவன் கொண்டுள்ள எதிர்பார்ப்பு.

அருமையானவர்களே, நாம் தேவனை நேசிப்பது மெய்யானால், அவருக்கு உகந்தவர்களாய் அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாய், பாவத்தை வெறுத்து வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. மாறாக, பாவத்துக்குள் வாழ்வோமாயின் நாமும் நித்திய அழிவினையே காணுவோம். நித்திய ஜீவனை இழந்துவிடுவோம்.

ஜெபம்: அன்பின் தகப்பனே, பாவத்துக்கு துணைபோகாமலும், பாவத்தை வெறுத்து பரிசுத்தமாய் வாழ தூயஆவியானவர் எங்களுக்கு கிருபை செய்யும்படியாக தாழ்மையோடு ஜெபிக்கிறோம். ஆமென்.