தேவனுக்குள் உறுதி

தியானம்: 2026 நவம்பர் 11 புதன் | வேத வாசிப்பு: ரூத் 1:8-18

YouTube video

அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை (ரூத் 1:18).

தீமையையும் நன்மையாக மாற்றிப்போட ஆண்டவரால் முடியும். ஆனால் அதற்கு நாம் தேவனோடு இருக்கவேண்டும். இங்கே குடும்பமாகப் புறப்பட்டுப் போனபோது, எலிமெலேக்குத்தான் இந்த முடிவை எடுத்திருக்க முடியும். ஒருவேளை நகோமிக்கு இந்த முடிவு சரியாகத் தெரியாவிட்டாலும், அவள் தனது கணவனின் தீர்மானத்துக்கு ஒத்துக்கொண்டு போயிருக்கலாம். அவர்களுடைய இரண்டு குமாரரும் அத்தேசத்துப் பெண்களை விவாகம் பண்ணிக் கொண்டனர். இருவரும் இறந்தபின்பு இப்போது, நகோமி, ஒர்பாள், ரூத் என்றதான மூன்று விதவைகள் இருக்கிறார்கள்.

நகோமி ஒரு மாமியாராக, தனது மருமக்களுக்கு அவர்கள் தேசத்திலேயே இருந்து மறுமணம் முடித்து வாழும்படிக்கு ஆலோசனை சொல்லுகிறாள். அதைக்கேட்ட ஒர்பாள் திரும்பிப் போய்விடுகிறாள். ஆனால் ரூத்தோ விடாமல் மாமியாரைப் பின்பற்றுகிறாள். நகோமி ஆராதிக்கும் அந்தத் தேவனில் இருந்த விசுவாசம், உறுதி எல்லாம் ரூத்துக்கு எங்கிருந்து வந்தது? நகோமி தேவனோடு கொண்டிருந்த உறவை ரூத் கண்டபடியினால்தான் அந்த நம்பிக்கை ரூத்துக்கும் வந்திருக்க வாய்ப்புண்டு. தனது மாமி நகோமியினூடாக ரூத் தேவனைக் கண்டாள். மிகவும் அழகான ஒரு வாக்கியத்தை ரூத் அறிக்கையிடுகிறாள். “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்திலே நானும் தங்கு வேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன் (ரூத் 1:16).”

ரூத்தின் மாற்றத்திற்கு நகோமி காரணம் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? “உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று சொல்வதில் இருந்து, நகோமி தேவனுக்குள் உறுதியாய் இருந்தாள் என்பதைக் கண்டு, அப்படியே தானும் பின்பற்றுவோம் என்று தீர்மானம் எடுத்து, தனது சொந்த உறவுகளைவிட்டு, மாமியோடுகூட அவளுடைய தேசமாகிய பெத்லகேமுக்குப் புறப்பட்டு வருகிறாள் ரூத்.

போதனைகளும், ஆராதனைகளும் செய்யமுடியாத ஊழியத்தை நமது வாழ்க்கை முறைகள் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நமக்கும் தேவனுக்குமான உறவில் நாம் சரியானபடி வேர் ஊன்றாவிட்டால், நாம் செய்யும் ஊழியங்களில் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. நமது வாழ்க்கைதான் நமது சாட்சி. பிரச்சனைகள், சோதனைகள், இழப்புக்கள், பஞ்சங்கள் எல்லாம் வரலாம்; ஆனால் அவைகளால் நாம் தேவனோடுள்ள உறவை இழந்துபோகாமல் அவருக்குள் உறுதியாக நிற்கக் கற்றுக்கொள்ளுவோம். நகோமி உறுதியாக இருந்தாள். அதனால் ரூத்தை ஆதாயப்படுத்திக் கொண்டாள். நாமும் தேவனோடுள்ள உறவில் உறுதியாக இருப்போமேயாகில் அநேகரை ஆதாயப்படுத்திக்கொள்ளலாமே.

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, உம்மோடுள்ள உறவில் நாங்கள் உறுதியோடிருந்து ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.”