மனக்கிலேசம்
தியானம்: 2026 நவம்பர் 12 வியாழன் | வேத வாசிப்பு: ரூத் 1:19-22

நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார் (ரூத் 1:21).
சிலவேளைகளிலே குடும்பங்களிலே, தலைவர்கள் சுயநலமாகவோ, பொருளாதார கஷ்டங்களின் நிமித்தமோ, தேவனைத் தேடாமல், அவருடைய சித்தத்திற்குக் காத்திராமல் தீர்மானங்களை எடுக்கின்றபோது, அந்தக் குடும்பம் முழுவதுமே கஷ்டத்துக்குள்ளாகப் போவதை நாம் கண்டிருக்கிறோம். பொருளாதார கஷ்டத்தை மட்டும் நிறைவேற்றவேண்டும் என்று வெளிநாடு சென்ற கணவன், மனைவி இவர்களின் குடும்பங்கள் அழிந்துபோவதை நாம் கண்டு வருகிறோம். தீர்மானத்தை எடுக்கும் தலைமைப் பீடத்தில் இருப்போர் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக தீர்மானங்களை எடுக்கும்போது, அது அந்தக் குடும்பத்தின் சமாதானத்தை அழித்து, ஏன் குடும்ப உறவுகளையே அழித்துப்போடுகிறது.
இங்கே எலிமெலேக்கு எடுத்த தீர்மானத்தினால், இப்போது நகோமி தேவனோடு உறவுள்ளவளாய் இருந்தாலும், தனது கணவனையும், இரண்டு மகன்மாரையும் இழந்தவளாய்த் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகிறாள். அவள் தன் அவலநிலையைத் தனது சொந்த ஜனங்களோடு பகிர்ந்துகொள்வதைக் காண்கிறோம். “நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன், கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப் பண்ணினார். கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில் நீங்கள் என்னை நகோமி என்பானேன். என்னை மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்” என்கிறாள். நகோமி தேவனில் நம்பிக்கையுள்ளவளாய் இருந்தபோதிலும், இவ்வளவு கஷ்டங்களுக்கூடாகவும், இழப்புக்களுக்கூடாகவும் சென்றபோது, கர்த்தரே இதை எனக்கு அனுமதித்தார் என்கிறாள். ஆனாலும் இந்தப் பாடுகளினூடாகச் சென்ற அவள் ரூத்தை ஆதாயப்படுத்திக் கொண்டாளே!
இன்று நாம் தேவனுக்குள்ளாக உண்மையாய் நடக்கும்போதும் எத்தனையோ துன்பங்களையும், பாடுகளையும் அனுபவிக்கவேண்டி வரலாம். அவைகள் இப்போது தீமைபோலத் தெரிந்தாலும் அதற்குள்ளும் கர்த்தர் ரூத்தைப் போன்றதான பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பார். ரூத்தின் வம்ச வழியிலே இயேசு இரட்சகர் வந்து உதித்தார். அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! இந்தப் பெரிய ஆசீர்வாதத்தில் ஒரு பங்காக அன்று நகோமி பட்ட பாடுகள் இருக்கிறதல்லவா! அன்று நகோமி என்ற பெயரோடு இருந்தவள், இப்போது தன்னை மாராள் என்று கூப்பிடுங்கள் என்கிறாள். ஆனால், நகோமியின் பாடுகளின் பலனாக மோவாபிய பெண் இயேசுவின் வம்சப்பட்டியலில் இடம் பிடித்தாள் அல்லவா! தேவன் தீமையையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றிப்போட வல்லவர். இன்று நாம் கடந்து செல்லும் பாடுகளுக்குள்ளும் நிச்சயம் நன்மை முளைத்தெழும்பும்.
ஜெபம்: “கர்த்தாவே, வெறுமையை நிறைவாகவும், தீமைகளை நன்மையாகவும் மாற்றுகிற உம்முடைய வல்லமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.”