தேவனுடைய தயவு

தியானம்: 2026 நவம்பர் 13 வெள்ளி | வேத வாசிப்பு: ரூத் 2:1-23

YouTube video

நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள் (ரூத் 2:10).

“ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போவதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்தி ருந்தேன். வழியில் நடத்துனர் வந்து பஸ் நேராகப் போகாது, திரும்பப் போகிறது, எனவே நீங்கள் இந்தப் பாலத்தின் அருகே இறங்கி நடந்து போங்கள் என்றார். நானும் இறங்கிவிட்டேன். அந்த இடத்தில் யாருமே இல்லை. வெறிச்சோடியிருந்தது. இரண்டு அடி எடுத்து வைக்கவில்லை, அந்நேரத்தில் வந்த ஒரு ஆட்டோ என்ணன்டையில் நிறுத்தி, அந்த ஒட்டுநர் “அம்மா ஏறுங்கோ போகலாம்” என்றான். நான் ஏறிவிட்டு என்னைத் தெரியுமா என்றேன். “தெரியாது ஆனால் நீங்கள் தனிமையில் போகிறீர்கள், நானும் அந்தப் பக்கம்தான் போகிறேன்; அதனால் உங்களையும் ஏற்றினேன்” என்றான். அந்த தனித்த நேரத்தில் அது தேவனுடைய தயவு என்று எண்ணிக்கொண்டு தேவனைத் துதித்தேன்” இது ஒருவரது அனுபவம்.

தனது சொந்த தேசத்தைவிட்டு, சொந்தக் குடும்பத்தைவிட்டு, புருஷனையும் இழந்த நிலையில், தனது மாமியாரைப் பின்தொடர்ந்து, மாமியாரின் தேவனை நம்பி வந்த ரூத்தின் விசுவாசத்தைக்குறித்து என்ன சொல்லுவோம்? தேவனை நம்பி வந்த ரூத், தேவனுடைய கண்களிலும் மனுஷருடைய கண்களிலும் தயை கிடைக்கப் பெற்றாள். அவள் ஏதோ ஒரு வயல்வெளிக்குத் தானியங்களைப் பொறுக்கியெடுப்பதற்காகவே சென்றாள். ஆனால் அது போவாசின் வயல் வெளியாக இருந்தது; இது தற்செயல் நிகழ்வு அல்ல, தேவதயவு. போவாசின் கண்களில் அவளுக்கு தயையும் கிடைத்தது.

அவள் தனது மாமியாகிய நகோமியின் தேவனை நம்பி, தனது மாமியாரைப் பின்பற்றி வந்தாள். வந்த இடத்திலும் தனது இஷ்டத்திற்குக் காரியங்களைச் செய்யாமல், மாமியாரின் சொல் கேட்டு, அவளது ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்தாள். அவள் நம்பிவந்த தேவன், அவளைக் கைவிடவில்லை. அவளுடைய அனைத்துக் காரியங்களையும் தேவன் தனது திட்டப்படியாக வாய்க்கப்பண்ணினார். தேவனின் திட்டம் ரூத்தின் வாழ்வில் நிறைவேறுவதற்கு அவள் பெரிதாக எந்த ஒரு காரியத்தையும் சாதித்துவிடவில்லை. அவள் செய்தது ஒன்றே ஒன்றுதான். தேவனின் கைக்குள்ளும், தனது மாமியாரின் கைக்குள்ளும் அடங்கியிருந்தாள்.

பலவேளைகளிலும் நமது காரியங்கள் சரியாவதற்கு நாமே திட்டமிட்டு, எல்லாவற்றையும் நமது கைகளில் எடுத்துக்கொள்வதுண்டு. தேவன் செயற்படுவதற்கும், அவரது சித்தத்திற்கும் காத்திருப்பதே கிடையாது. நாமே தேவனின் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக பலவேளைகளிலும் இருந்து விடுவதுண்டு. தேவதயவைப் பெற்றுக்கொள்ள நாம் பொறுமையோடு இருக்க வேண்டும். அப்போது தேவன் தமது திட்டப்படி அனைத்தையும் செய்து முடிப்பார்.

ஜெபம்: “கர்த்தாவே, அனுதினமும் உம்முடைய கண்களிலும், எங்களைக் காண்கிற எல்லார்கண்களிலும் தயவு கிடைக்கச்செய்து எங்களை நடத்திவருகிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.”